14 வயது சிறுவனை கொடூரமாகத் தாக்கிய பொலிஸார் ; இலங்கையில் அதிகரிக்கும் கண்டனம்

அளுத்கமவின் தர்ஹா நகரை சேர்ந்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் குறித்தும் பின்னர் சட்டவைத்திய அதிகாரி இனரீதியில் அவமதிக்கும் விதத்தில் நடந்துகொண்டமை குறித்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஓட்டிசம் என்ற மனஇறுக்க நோயினால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனையே காவல்துறையினர் அளுத்தகமவின் தர்காநரில் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர் என முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தாக்கப்பட்ட சிறுவனின் உடலில் காணப்படும் காயங்களின் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

குறிப்பிட்ட சிறுவன் சிறுவயது முதல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான், தற்போது 14 வயது என்ற போதிலும் ஆறு வயது சிறுவனிற்கு உள்ள மனோநிலையுடனேயே அந்த சிறுவன் காணப்படுகின்றான். மே25 ம் திகதி தாரிக் தனது துவிச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து புறப்பட்டு தர்ஹா நகரில் உள்ள அம்பஹாக நகரிற்கு சென்றுள்ளான்.

அவ்வேளை ஒரு பொலிஸ்சோதனை சாவடியில் காணப்பட்ட காவல்துறையினர் அந்த சிறுவனை தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த சோதனைசாவடியில் ஆறுஏழு காவல்துறையினர் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுவனை துவிச்சக்கர வண்டியிலிருந்து இழுத்து விழுத்தியுள்ளனர்.

ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் தாரிக் பொலிஸாருடன் உரியமுறையில் பேச முடியாத நிலையில் காணப்பட்டுள்ளான்.

சிறுவன் மோசமாக தாக்கப்பட்டுள்ளான் ,காவல்துறையினர் முகத்திலும்,தலையிலும் உடலின் பல பாகங்களிலும் தாக்கியுள்ளதுடன்,வீதியில் விழுத்தி இழுத்துள்ளனர். இதன் பின்னர் அந்த வழியால் சென்ற பொதுமக்கள் சிலரும் சிறுவனை தாக்கியுள்ளனர்.

சிறுவன் தொடர்ந்து அழுதுகொண்டிருந்ததன் இதன் காரணமாக சீற்றமடைந்த பொலிஸார் அவனது கைகளை பின்னால் கட்டி மரத்தின் அருகே காணப்பட்ட மின்விளக்கொன்றுடன் சேர்த்து கட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த வழியால் சென்ற பலர் பார்த்துள்ளனர், அவர்களில் ஒருவர் தாரிக்கின் தந்தையை நன்கு அறிந்தவர், அவர் சென்று தாரிக்கின் தந்தையை அழைத்து வந்துள்ளார். தாரிக்கின் தந்தை தனது மகனை விடுமாறு பொலிஸாரை மன்றாட்டமாக கேட்டுள்ளார். அவர் தனது மகனின் உளநிலை குறித்து பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தாரிக்கின் தந்தையை வார்த்தைகளால் நிந்தித்த காவல்துறையினர் ,தனது மகன் வீட்டிலிருந்து வெளியேறியதற்கு தானே காரணம் என எழுதிதருமாறு தந்தையை கேட்ட பின்னர் மகனை அழைத்துச்செல்வதற்கு தந்தைக்கு அனுமதிவழங்கியுள்ளனர். தாரிக்கின் தலையிலும் கையிலும் முதுகிலும் உடலின் பல பாகங்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பொலிஸார் குறித்த அச்சம் காரணமாக தந்தை தாரிக்கினை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு தயங்கியுள்ளார். எனினும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார் மகன் வீட்டிலிருந்து வெளியே சென்றமைக்கு தந்தையே காரணம் என தெரிவித்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்க மறுத்துள்ளனர். அதன் பின்னர் அவர் அந்த பகுதிக்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.அவர்கள் அவரின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனினும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததும்,பொதுமக்கள் சிலரின் உதவியுடன் தாரிக்கின் தந்தை களுத்துறை களுத்துறை மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்துள்ளார். அவர் தாரிக்கினை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதன் பின்னர் தாரிக்கின் தந்தையும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் நாகொட சட்டவைத்திய அதிகாரியின் உதவியை நாடியுள்ளனர். அதன் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் சீறிப்பாய்ந்த சட்ட வைத்திய அதிகாரி ஏன் இந்த சிறுவனை இங்கு கொண்டு வந்தீர்கள், இந்த சிறுவனை அங்கொடைக்கு அனுப்பவேண்டும்,இவ்வாறான முஸ்லீம்களே நாங்கள் முகக்கவசம் அணிவதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

அவனுக்கு இது தேவை அவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள் நான் அதனை செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தாரிக்கினை உளநல மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். தாரிக் மருந்து பயன்படுத்துகின்றாரா என்பதை கேட்டறியமால் அவர் பலவாரங்களாக மருந்து பயன்படுத்தவில்லை என தெரிவித்து சட்ட வைத்திய அதிகாரி அங்கொடையில் தாரிக்கினை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் அதிஸ்டவசமாக மருத்துவமனையின் உளவியல் நிபுணர் தாரிக்கினை நன்கு அறிந்தவர் என்பதாலும்,தாரிக் தொடர்ந்தும் சிகிச்சை எடுப்பவர் என்பதை அறிந்ததாலும்,அவர் தனது வழமையான மருந்தினை வழங்கி தாரிக்கினை மருத்துவமனையிலிருந்து விடுவித்துள்ளார்.

எனினும் அதன் பின்னர் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து எந்த பதில் நடவடிக்கையையும் எடுக்கவில்லை,இந்த சம்பவத்தை மூடிமறைப்பதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர்.

ஆனால் தாரிக்கின் தந்தையும் ஏனையவர்களும் இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அம்பலப்படுத்தியுள்ளனர். இலங்கையில் பொலிஸாரின் ஈவிரககமற்ற தன்மை சிலகாலமாக சாதாரண விடயமாக காணப்படுகின்றது,தற்போது சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

எனினும் கடந்த சில மாதங்களில் முடக்கல் நிலையின் போது ஊரடங்கினை மீறுபவர்களிற்கு எதிரான இவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

படங்கள்- அலிசாஹிர் மௌலானாவின் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டவை