13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கி, தேர்தல் நடத்தப்பட வேண்டும்-கோவிந்தன் கருணாகரம்

தேர்தல் நடத்தப்பட வேண்டும்
எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்குத் தான் மாகாணசபை முறைமை வந்தது. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்காக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின், கையை முறுக்கித்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது.

அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குப்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

காணி அதிகாரங்கள், காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 2015 இற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளூர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்குக் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு” என்றார்.

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு அதிகாரங்களை வழங்கி, தேர்தல் நடத்தப்பட வேண்டும்-கோவிந்தன் கருணாகரம்

Leave a Reply