13 ஆவது சட்டத்திருத்தை அமுல் படுத்த இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

“இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிற அடிப்படையில், அதை முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என இலங்கையிடம் பிரதமர்  இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான இந்தப் பேச்சுக்கள் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இதுதான் முதல்  முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது, இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்ஷவுக்கு மோடி வாழ்த்துக்களை கூறினார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் மோடி,  இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றை எதிர்பார்க்கும் தமிழர்களின் அவாவை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமைதி மற்றும் சமாதானத்துக்கான பேச்சை முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்கிறது. அதன் படி தமிழர்களுக்கும் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்துவதாக  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக இந்தியப் பெருங்கடல் பிரிவு இணைச் செயலர் அமித் நரங் கூறும்போது, “இந்த உச்சி மாநாட்டின் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. முன்னோக்கிச் செல்வது மற்றும் உறவுகளை மேலும் ஆழப்படுத்த மிகப்பெரிய திட்டத்தை வழிவகுக்க உதவும்” என்றார்.

இருதலைவர்களும் மீனவர்கள் பிரச்சினை குறித்தும் விவாதித்தனர், இதில் இதுவரை இருந்து வரும் “ஆக்கப்பூர்வமான, மனிதநேயவாத அணுகுமுறையே கைகொடுக்கும்” என்று இருவரும் ஒப்புக் கொண்டதாக நரங் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது இலங்கையுடனான பௌத்த உறவுகளை வளர்க்க பிரதமர் மோடி 15 மில்லியன் டாலர்கள் உதவி அறிவித்தார்.