தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சஜித் பிரேமதாசாவை இன்று சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் அலுலகத்தில் காலை 7.30 மணியளவில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் , மற்றும் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மற்றைய தரப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் வட மாகாண பிரதம அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு பொது வேட்பாளரைக் களமிறக்கவுள்ள நிலையிலேயே வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக சஜித் பிரேமதாச, பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பதற்கான அழைப்பினை தனித்தனியாக அரசியல் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கும் விடுத்திருந்தார்.
இந்த அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் பிரச்சினை சம்பந்தமான தங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் சஜித் பிரேமதாச , தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்காக முன்னெடுக்க உள்ள நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பில் பங்கேற்பதென முடிவு செய்ததாகக்கூறப்படுகின்றது.
இச் சந்திப்பில், பிரதானமாக தமிழ் மக்களினுடைய அரசியல் அபிலாசைகளைத் தீர்க்கும் முகமான சமஸ்டி முறையான அரசியல் தீர்வு தொடர்ந்தும் எட்டப்படாமல் இருப்பதனாலேயே பொது வேட்பாளர் என்ற முடிவு வலுப்பெற்றது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.