11 நாள் நீடித்த தொடர் போராட்டம் – குஜ்ஜார் மக்களின் கோரிக்கையை ஏற்ற ராஜஸ்தான் அரசு

11 நாள் நீடித்த தொடர் போராட்டத்திற்குப் பிறகு, குஜ்ஜார்  இன மக்களின் கோரிக்கையான வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீட்டை ராஜஸ்தான் அரசு அனுமதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அமைச்சரவை துணைக்குழுவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றும் ராஜஸ்தான் மாநில அரசு சார்பில் எரிசக்தி அமைச்சர் பி.டி.கல்லா மற்றும் மாநில அமைச்சர்கள் டிக்கா ராம் ஜூலி மற்றும் சுபாஷ் கார்க் போன்றோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஆறு கோரிக்கைகளை உள்ளடக்கிய ஒரு குழு அமைக்கப்படும். அந்த குழு தற்போது உள்ள  வேலை வாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய பிரிவின் (எம்பிசி) இடஒதுக்கீட்டை  5 சதவீத  விரிவாக்குவது தொடர்பாக ஆய்வு செய்யும் என்றும் இதை போல மற்ற மாநிலங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் குஜ்ஜார் மக்களுக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு, இதற்கு முந்தைய போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட குற்ற வழக்குகளைத் திரும்பப் பெறுதல், அதில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கான மறுவாழ்வு ஆகிய முக்கிய அம்சங்களை இந்த ஒப்பந்தம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.