13ஐ அமுல் செய்ய இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் – மனோ, செல்வம், சித்தர் கூட்டாக வலியுறுத்து

13 ஆவது திருத்தத்தை அமுல் படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய  சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள கனேடியத் தூதுவரின் இல்லத்தில் இன்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வெல்ஷ்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதி சின்னையா இரத்தின வடிவேல், கனேடியத் தூதரக அரசியல் அதிகாரி கோபிநாத் பொன்னுத்துரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. ஆகியோர், கனேடிய வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய விவகார பணிப்பாளர் நாயகம் மரியா லூயிஸ் ஹனானிடம் நேரில் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை விடுத்துள்ளனர்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகின்றார். குறைவாகவே  செய்கின்றார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய  சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். இதற்கு கனடா முன்முயற்சி எடுக்க வேண்டும். நாட்டை வெளியேறிய தமிழர் பெருந்தொகையினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ள நாடு என்ற வகையில் கனடாவுக்கு இதற்கு உரிமை உள்ளது.”என்றும் கூறியுள்ளனர்.