கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தம்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி | 13 மனித எச்சங்கள் | அகழ்வு இடை நிறுத்தம்  - Vanakkam London

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய்  காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில்  இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

இந்நிலையில் மாலை 03.30மணியளவில் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டதுடன், குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்  வியாழக்கிழமை (13.07.2023) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 பகுதிகளில் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, அவ்வாறு இனங்காணப்பட்ட இடங்கள் தடயவியல் காவல்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் காவல்துறையினர் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன.