ஹொங்கொங் பிரச்சினை தொடர்பாக சீனா – அமெரிக்கா மோதல்

ஹொங்கொங் பிரச்சினை தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமிடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

ஹொங்கொங்கின் அதிகாரத்தைப் பறித்து அந்நாட்டை தனது முழுமையான கட்டுப்பாட்டிற்குள்  சீனா கொண்டு வந்தது. ஆனால் இச்சட்டத்தை ஹொங்கொங் மக்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர். ஆனால் சீனா அவர்களின் போராட்டங்களை ஒடுக்கியது. அத்துடன் நேற்று  இந்தச் சட்டத்தை பாராளுமன்றிலும் நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் இந்த செயலிற்கு உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இந்த சட்டம் ஹொங்கொங்கின் தனித்துவமான அந்தஸ்தை முடிவிற்குக் கொண்டு வரக்கூடும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக சீனாவை அமெரிக்கா நேரடியாக எதிர்த்து வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு சபையிலும் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டுமென அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய சர்வதேச விவகாரம் எனவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.. ஆனால் சீனா இது தன்னுடைய உள்நாட்டு விவகாரம் எனக் கூறியுள்ளதுடன், தேசிய பாதுகாப்பு சட்டம் இயற்றப்படுவது உள்நாட்டு விவகாரம் என்பதால், ஐ.நா. சபை இதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறிவருகிறது.

70 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஹொங்கொங், பல்லாண்டு காலமாக இங்கிலாந்தின் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. 1997ஆம் ஆண்டு ஹொங்கொங்கை இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அந்த வேளையில் ஒரு தேசம் இரண்டு அமைப்பு என்ற விதத்தில்  ஹொங்கொங் இயங்கும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. ஆனால் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்து மக்களின் சுதந்திரத்தை ஒடுக்க முயல்கிறது என்பதே ஹொங்கொங் மக்களின் போராட்டத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.