வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி இந்திய குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி

இந்திய குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் (உழவு இயந்திரம்) பேரணி நடத்தப் போவதாக அறிவித்த விவசாயிகளின் போராட்டத்திற்கு   டெல்லி பொலிஸ்   அனுமதி அளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்திய நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  இதன் மூலம் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஏ.பி.எம்.சி. மண்டிகளுடன் தனியார் துறையினரும் ஒப்பந்த அடிப்படையில் வேளாண் உற்பத்தி, கொள்முதல், சேமிப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட இந்தச் சட்டங்கள் வகை செய்கின்றன.

ஆனால் இந்தச் சட்டங்கள் தனியாருக்கு பயன் தருவதாகத்தான் இருக்குமே தவிர, விவசாயிகள்  பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி, குறித்த சட்டங்களை இரத்து செய்யுமாறு கடந்த இரு மாதங்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த சட்டங்களை  தொடர்பாக 11 கட்டப் பேச்சுவார்த்தைகள் தீர்வின்றி நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அந்தப் போராட்டத்துக்கு இதுவரை அனுமதி அளிக்காமல் இருந்து வந்த டெல்லி பொலிஸ்  தற்போது அனுமதி அளித்துள்ளது.