தேசியப் பாதுகாப்புப் படை தலைவரிடம் மன்னிப்புக் கோரிய புதிய அதிபர் ஜோ பைடன்

அமெரிக்காவின் நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படை தலைவரிடம்  புதிதாக அதிபர் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மன்னிப்புக் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினர் அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள கார்   நிறுத்துமிடத்தில் உறங்கும்  புகைப்படம் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது.

இதையடுத்தே  அதிபர் ஜோ பைடன் அந்தப் படைத் தலைவரிடம் தொலைபேசி மூலம்   மன்னிப்பு கேட்டுள்ளார். இம்மாத தொடக்கத்தில் கேபிட்டல் கட்டடத்தில்  முன்னாள் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். அத்துடன் பைடன் பதவியேற்பை ஒட்டி ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்கலாம் என்று உளவுத் துறை எச்சரிக்கை அளித்திருந்தது.

இதையடுத்து, பைடன் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது வாஷிங்டன் டி.சி.யில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கேப்பிட்டல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்ற பின் கேப்பிட்டல் கட்டடத்துக்கு அருகில் உள்ள கார் நிறுத்தும் இடத்தில் படுத்து உறங்கும் சில புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இதையடுத்து, நேஷனல் கார்டு பீரோ தலைவரை அழைத்த அதிபர் பைடன் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடு என்ன செய்யலாம் என்றும் அவரிடம் கேட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.