வேற்றுக்கிரகவாசிகளை காண இலட்சக்கணக்கான மக்கள் குவிந்தார்களா?

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்திலுள்ள ‘ஏரியா 51’ என்னும் இடத்தில் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளதாகவும், அதை காண விரும்புவர்கள் வரவேற்கப்படுவதாகவும் கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை ஏற்று நேற்று (20.09) இலட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் ஒன்றுகூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 75பேர் மட்டுமே இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் விமானப்படை தளம் அமைந்துள்ள இந்தப் பகுதியில் வேற்றுகிகரகவாசிகள் மற்றும் அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் காணப்படுவதாக பல தசாப்தங்களாக கட்டுக்கதைகள் கூறப்பட்டு வருகின்றன.

அதிகபட்ச பாதுகாப்பு வளையத்தில் அமைந்துள்ள தங்களது தளத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று அமெரிக்க விமானப்படை அறிவுறுத்தியுள்ள நிலையிலும், செப்டெம்பர் 20ஆம் திகதி பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இந்தப் பகுதியில் கூடுவதற்கான பிரசாரம் முகநூலில் முன்னெடுக்கப்பட்டது.

இறுதியில் நேற்று இந்தப் பகுதியில் வித்தியாசமான ஆடைகளுடன் கூடிய 75 பேர் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர்.