வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு குடியுரிமை வழங்க அமீரகம் முடிவு

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முதலீட்டாளர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட சிறப்பு தகுதி கொண்டவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் உள்ளிட்டோர் அமீரக குடியுரிமை பெறும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பங்களிப்பை செலுத்த உதவியாக இருக்கும். அவர்கள் அமீரக குடியுரிமை பெறுவதோடு மட்டுமல்லாமல் தாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ அந்த நாட்டின் குடியுரிமையையும் வைத்துக் கொள்ளலாம்.

அமீரக அதிபர் மேதகு ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யான் வழிகாட்டுதலின் பேரில் அமீரக அமைச்சரவை இந்த விதிமுறைகள் மாற்றத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இத்தகைய தகுதி கொண்டவர்களை அமீரக குடியுரிமை பெறுவதற்கு அமீரக அமைச்சரவை, ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் நிர்வாக கவுன்சில் உள்ளிட்டவை பரிந்துரை செய்ய முடியும். ஒவ்வொரு பிரிவினருக்கும் குடியுரிமை பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டைச் சேர்ந்த தகுதியுடையோருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் அவர்களது அனுபவங்கள் அமீரகத்தின் வளர்ச்சிக்கு பயனளிக்கும் வகையில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டவர்கள் என்றாலும் இதுவரை அந்த நாட்டு அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலுசேர்க்கும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அந்த நாடு முதல்முறையாக அறிவித்துள்ளது.

சிறந்த கல்வியறிவு மற்றும் பணித்திறனை கொண்டுள்ளவர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் நிரந்தரமாக தக்க வைக்கும் முயற்சியாக பார்க்கப்படும் இந்த திட்டத்தால், குறைந்த வருமானம் கொண்ட உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு பெரியளவில் பலன் இருக்காது என்றே கருதப்படுகிறது. நேரம், காலம் பார்க்காமல் கடும் உழைப்பை வெளிப்படுத்திய பலரது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது இந்த அறிவிப்பு.

இதில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்னவென்றால், குடியுரிமை பெற விரும்புபவர்கள் மற்ற நாடுகளை போன்று தாங்களாகவே குடியுரிமை கோரி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாது.

ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த புதிய திட்டத்தின்படி, குடியுரிமை பெற எந்தவித விண்ணப்பம் சார்ந்த நடைமுறையே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, தகுதிவாய்ந்த தனிநபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச குடும்பமோ அல்லது அதிகாரிகளோ பரிந்துரை செய்வார்கள் என்றும் அதுகுறித்த முடிவை அமைச்சரவை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.