விவசாயிகள் போராட்டம் குறித்து பிரித்தானியா நாடாளுமன்றத்தில் விவாதம்- இந்தியா கண்டனம்

இந்திய அரசின் 3 விவசாய சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் இந்தியாவில் ஊடக சுதந்திரம் குறித்தும் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் நேற்று நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவாகரம் என்று ஆசியாவுக்கான ஐக்கிய முடியரசின் துணை அமைச்சர் நீகல் ஆடம்ஸ் கூறியுள்ளார்.

பிரித்தானியாவின் நாடாளுமன்ற விதிகளின்படி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்ற மனுக்கள்  மீதான விவாதம் நடத்தப்படும். அதன்படி தாராளவாத கட்சி உறுப்பினர் குர்ச் சிங் உருவாக்கிய “எதிர்ப்பாளர்களின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசை வலியுறுத்தவும்” என்ற மனு 1.15 இலட்சம் கையெழுத்துக்களை பெற்றதைத் தொடர்ந்து நேற்று விவாதம் நடைபெற்றது.

வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் நடந்த விவாதத்தில் பேசிய 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் இந்திய ஜனநாயகத்தை தாக்கி பேசினர் என்று  இந்திய ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.

மேலும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜித் சிங் இந்த விவாதத்தில்தான்  உரையாற்றிய  காணொளியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்,“மனித உரிமைகள்,ஊடக சுதந்திரம், அறிவுத்துறை சுதந்திரம் ஆகியவை போராடி பெறப்பட்டவை. அவை உலகலாவியவை, போற்றப்பட வேண்டியவை. என்று கூறியுள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள ஈஸிங் சவுத்ஹால் உறுப்பினரும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவருமான வீரேந்திர ஷர்மா, “இரு தரப்பும் ஒரு ஒப்பந்தத்தை அடைவதற்கான தேவையை உணர வேண்டும். இது தொடர்பாக பிரித்தானிய அரசு உதவி செய்ய முன் வந்து இந்த பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், விவசாயக் கொள்கை இந்திய அரசாங்கத்தின் உள்நாட்டு விவகாரம். எந்த ஒரு ஜனநாயகத்திற்கும் பேச்சு சுதந்திரமும், அமைதியாக போராடும் உரிமையும் இன்றியமையாதவை என்று ஐக்கிய முடியரசு கருதுகிறது. அது நேரம் போராட்டம்  சட்டத்தை மீறினால், சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் உரிமை பாதுகாப்பு படைகளுக்கு  உள்ளது. என்று அமைச்சர் நீகல் ஆடம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.