விவசாயிகள்  பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்- இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா  வலியுறுத்தியுள்ளது.

 மத்திய அரசால் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 26-ம் திகதிடெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.

இதைத்தொடர்ந்தும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், இந்த போராட்டங்களை தடுக்கும் வகையில்,  டெல்லி எல்லைகளில் காவல்துறை தடுப்பு வேலிகள், தற்காலிக சுவர்கள் அமைத்து   உள்ளனர். மேலும்  மத்திய அரசு அங்கு இணையதள துண்டிப்பும் செய்திருந்தது.

இந்நிலையில்,  இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி வரும் நிலையில், தற்போது சர்வதேச அளவிலும் கவனம் பெற்று உள்ளது.

இந்த போராட்டத்துக்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என்பதை  அமெரிக்கா அங்கீகரிக்கிறது.  இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.   அமைதியான போராட்டங்கள் வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம்” தெரிவிக்கப்பட்டுள்ளது.