விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு  நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்துள்ளது.

மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்திய தலைநகர் டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில் 40ஆம் நாளாக போராட்டத்தில்   ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.

இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு, இதுவரை 6 கட்டங்களாக தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை நடந்த பேச்சுகளில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இதையடுத்து, நேற்று மீண்டும் பேச்சு நடந்தது. இதில் குறைந்த பட்ச ஆதாரவிலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறியதாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பியபோதும், அதை விவசாயிகள் ஏற்காததால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளன என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  குற்றம்சுமத்தியுள்ளார்.

இதையடுத்து மீ்ண்டும் வரும் 8-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.