விவசாயிகளின் போராட்டம்- பாகிஸ்தானும், சீனாவுமே காரணம் – அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

விவசாயிகளின் போராட்ட பின்னணயில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்து கொண்டு தூண்டி விடுவதாக இந்திய நுகர்வோர் துறை அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம்   16ஆவது நாளாக நடந்து வருகிறது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முன்மொழிவை விவசாயிகள் நிராகரித்து விட்டதையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சமரச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்னா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அமைச்சர் ராவ்சாஹேப் தன்வே, “தற்போது நடந்து வரும் போராட்டம் விவசாயிகளுடையதே இல்லை. சீனாவும், பாகிஸ்தானும் அதன் பின்ணயில் உள்ளன. முதலில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை அவை தூண்டி விட்டன. தேசிய குடியுரிமை பதிவேடு வருகிறது, குடிமக்கள் திருத்த சட்டம் வருகிறது, அதனால் முஸ்லிம்கள் நாட்டை விட்டு ஆறு மாதங்களில் வெளியேற வேண்டும் என பீதியை கிளப்பின. ஆனால், அப்படியேதேனும் நடந்ததா? இதுபோன்ற முயற்சிகள் எல்லாம் பலன் கொடுக்காது. இந்த போராட்டங்களால் விவசாயிகளுக்கே இழப்பு நேரிடும். இது மற்ற நாடுகளின் சதி” என்றார்.

கடந்த புதன்கிழமை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி சீக்கிய எம்.பி, இந்திய விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேசியபோது, அதை தவறுதலாக புரிந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், “இது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்னை. அதை அந்த நாடுகளே தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது கருத்து பரவலாக விமர்சிக்கப்பட்டது. எனினும், பிறகு பிரிட்டன் வெளியுறவுத்துறை தலையிட்டு இது இந்தியாவில் நடக்கும் உள்விவகாரம் என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது என்று இந்தியா டுடே நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் மத்திய அமைச்சரே விவசாயகள் போராட்டத்தை பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தொடர்புபடுத்தி பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.