‘விரிவான கூட்டாண்மை’ நிலைக்கு உயர்வதற்கு இரு நாடுகளும் தீர்மானம் – ஜனாதிபதி டோ லாம்

இலங்கைக்கு வருகை தந்திருந்த வியட்நாம்  ஜனாதிபதி டோ லாமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை (8) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதன் போது இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான 55 ஆண்டுகால இராஜதந்திர உறவை ஒரு ‘விரிவான கூட்டாண்மை’ மட்டத்திற்கு உயர்த்துவதற்கு இரு நாடுகளும் தீர்மானித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பரிமாற்றத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை நோக்கி விரைவாகக் கொண்டு செல்ல இணக்கம் காணப்பட்டுள்ளது என்று வியட்நாம்   ஜனாதிபதி  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் மிகவும் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். 55 வருடங்களாகப் பேணி வரும் எமது நீண்டகால நட்புறவை மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்ல எம்மால் முடியும். அதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம். அதற்காக வியட்நாம் – இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே காணப்படக்கூடிய வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தோம்.

எமது நாடுகளை மேலும் உயர்ந்த  நிலைக்கு முன்னேற்றுவதற்காக இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த  துறைகள் குறித்து நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினோம். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான கூட்டாண்மையை மேம்படுத்திக் கொள்வதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். பிராந்திய மற்றும் உலகளாவிய மட்டத்தில் பொது நோக்கை நாம் கூட்டாக பகிர்ந்து கொள்வதோடு இந்த முக்கியமான காலகட்டத்தில் இருதரப்பு உறவுகளை மற்றொரு தளத்திற்கு உயர்த்துவதற்கு இரு நாடுகளுக்கும் பல வாய்ப்புகள் காணப்படுவதாக நாம் அடையாளங் கண்டுள்ளோம். இந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டு, வியட்நாம்-இலங்கை உறவுகளை ஒரு ‘விரிவான கூட்டாண்மை’மட்டத்திற்கு உயர்த்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்கவும் நானும் உடன்பாட்டுக்கு வந்தோம்.

எமக்கிடையே பொருளாதார, பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வது இன்றியமையாததாகும். அதன்படி பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல், பாதுகாப்பு  சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக கட்சி, அரசு, பாராளுமன்றம் மற்றும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும், உயர்மட்டப் பரிமாற்றங்களையும் மேலும் வலுப்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளைப் பேணவும் நாம் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளோம்.

அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான இலக்குகளை நாங்கள் நிர்ணயித்துள்ளோம். அதன்படி பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு, விவசாயம், வலுசக்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இருதரப்பு வர்த்தக ரீதியிலான வருமானத்தை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை எட்ட விரைவான நடவடிக்கை எடுக்கவும், எதிர்காலத்தில் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் நாம் உடன்பாட்டிற்கு வந்தோம். வியட்நாம் தொழில்முயற்சியாளர்கள் இலங்கையில் முதலீடுகளை விரிவுபடுத்தத் தயாராக உள்ளதுடன், இது இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்து இரு நாடுகளுக்கும் இடையே மூலோபாய மற்றும் அடையாள ரீதியிலான திட்டங்களை உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும்.

அதேபோன்று கல்வி, கலாசாரம், சமயம் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு வழிகளை நாம் ஆராய வேண்டும். எமது இரு நாடுகளுக்கும் இடையே மிக நீண்டகால கலாசார மற்றும் வரலாற்று ரீதியான பிணைப்புகள் உள்ளன. மேலும் கல்வி, சுற்றுலாத்துறை மற்றும் மக்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் என்பனவே எமது அடித்தளத்தை உருவாக்குகின்றன. சிரேஸ்ட வியட்நாம் தலைவரும் உலகப் புகழ்பெற்ற கலாசார ஆளுமையுமான ஜனாதிபதி ஹோ சி மின்  தொடர்பில் இலங்கை காண்பிக்கும் கௌரவம் குறித்து நன்றி தெரிவிப்பதோடு இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த உயர்ந்த கலாசார, ஆன்மீக பெறுமதிகளை தொடர்ச்சியாக மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.

அத்துடன், விமானச் சேவைகளை மேம்படுத்துவதற்காக வியட்நாம்-இலங்கை விமானப் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான புதிய ஒத்துழைப்புகள் குறித்தும் நாங்கள் கலந்துரையாடினோம்.  இது பல்வேறு துறைகளின் ஊடாக பலமான ஒத்துழைப்பிற்கு அடித்தளமாக அமையும்.

குறிப்பாக, சர்வதேச ரீதியாக எமது கவனத்திற்குரிய விடயங்கள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்தோம். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்து எமது கவனத்தைச் செலுத்தினோம். விசேடமாக கடல்சார் போக்குவரத்தில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதன் போது  நாம் சர்வதேச சட்டங்களுக்கு அமைய செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம். அதன்படி அமைதி, ஸ்திரத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, அத்துடன் கிழக்குக் கடல் உட்பட கடல் மற்றும் சமுத்திரங்களின் ஊடாக கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் பயண சுதந்திரத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து நாம் கவனம் செலுத்தினோம்.

இந்த முழுமையான கூட்டாண்மையின் மூலம், நாம் மேலும் விரிவான மற்றும் நிலையான ஒத்துழைப்புகள் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதன் மூலம் எமது இரு நாட்டு மக்களுக்கும் அமைதி மற்றும் சுபீட்சத்தின் ஊடாக அபிவிருத்தியை உருவாக்கிக் கொள்ள முடியும் என்றார்.