விமானம் மீது லேசர்கதிர் தாக்குதல் முயற்சி;அமெரிக்கா குற்றச்சாட்டு

தங்கள் நாட்டு கண்காணிப்பு விமானம் மீது லேசர் கதிர்களை பாய்ச்சியதாக சீன கடற்படை மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ‘பி8ஏ போசிடான்’ என்ற கண்காணிப்பு விமானம் கடந்த வாரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. பிலிப்பைன்சின் குவாம் பகுதியில் சுற்றி வந்தபோது, அதன் மீது சீன கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து லேசர் கதிர்களை பாய்ச்சி சிதைக்க முயன்றதாக அமெரிக்க ராணுவம் நேற்று குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக பசிபிக் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போசிடான் கண்காணிப்பு விமானம் மீது சேதத்தை ஏற்படுத்தக் கூடிய லேசர் (ஒளிக்கற்றைகள்) பாய்ச்சப்பட்டது சென்சார் கருவிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த லேசர் கற்றைகளை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. சீன கடற்படை இந்த லேசர் கற்றைகளை ஆயுதமாக பயன்படுத்தி விமானத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. இந்த லேசர் காரணமாக, விமானத்துக்கும், அதில் இருந்த கடற்படையினருக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல்,’ என்று கூறப்பட்டுள்ளது.