விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்களில் எவரும் இல்லை ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !!

கொரோனா வைரஸ் காரணமாக சிறிலங்காவின் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளவர்களில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது சிறிலங்கா அரசாங்கம் ‘ஓர் இனநாயக அரசு’ என்பதனை மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றினைத் தடுக்கும் நோக்கத்தோடு, கடந்த மார்ச் மாதம் 17 முதல் ஏப்ரல் 4 வரை 2961 பேர் பல கட்டங்களாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்தினை வெளியிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவாரகங்களுக்கான அமைச்சு, சிறிலங்கா அரசு என்பது ஓர் கட்டமைக்கப்பட்ட பௌத்த பேரினவான இனநாயக அரசு என்பதனை பல தடவைகள் வெளிப்படுத்தியுள்ளன. சமீபத்தில் சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டியிருந்தது.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே தமிழ்மக்கள் மீது அடக்குமுறையினையும், பாகுபாட்டையும், பாரிய மனிதஉரிமை மீறல்களையும், இனப்படுகொலையினையும் சிறிலங்கா அரசாங்கம் செய்திருந்தது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக விடுவிக்கப்பட்ட கைதிகளில் தமிழர்கள் எவரும் இல்லை என்பது தமிழர்களுக்கு நீதிக்கான வெளி சிறிலங்காவில் இல்லை என்பதனை மட்டும் வெளிப்படுத்தவில்லை. தமிழ்போர்கைதிகளின் உயிர்பாதுகாப்பினையும் அச்சத்துக்கு உள்ளாக்குகின்றது என நாடுகடந்த தமிழீழ அராசங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.