விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தது அமெரிக்கா – வெளியுறவுத் துறை அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்தும் நிகழ்வுகள் அமெரிக்காவில் பகிரங்கமாக இடம்பெற்று வருகின்ற போதிலும் அந்த அமைப்பு மீதான தடையை அமெரிக்கா தொடர்ந்து நீடித்துள்ளது.

அமெரிக்காவின் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகள் மீதான தடைப்பட்டியலில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் குறித்த பட்டியலின் புதுப்பித்த அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தொடர்ந்தும் உள்ளடக்கபட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் பிரஜா உரிமை சட்டத்தின் 219 ஆவது சரத்துக்கு அமைவாக எல்.ஜே.மற் றும் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆகிய அமைப்புகள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளாகவும் பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீடித்துள்ளமைக்கு இலங்கை அமைச்சர்கள் சிலர் தமது சமூக ஊடகங்களில் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.