2005 ஆம் ஆண்டு ஜனாதிபதிதேர்தல் புறக்கணிப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது -யோகேஸ்வரன்

தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு ஒன்று நடைபெற்றது. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது தவறான நடவடிக்கையென அப்போதைய சூழலில்கூறமுடியாத நிலையிருந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு வடகிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

தேர்தலை பகிஸ்கரிக்குமாறு கோருவது ஒரு பிழையான செயற்பாடு எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலை பகிஸ்கரிக்கும் முடிவுக்கு வராது எனவும் தெரிவித்தார்.

நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துதெரிவித்த அவர்,

யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் கட்சிகளுக்குமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அதில் சில முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக நாம் அறிந்தோம்.

அதேவேளை தமிழ் கட்சிகளுக்கிடையிலான ஒற்றுமையின்மை காரணமாக அதிலே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரையில் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப்பெறுவதற்கான எங்களாலான அனைத்து நடவடிக்கைகளையும் செய்துவருகிறோம். எமது தலைவர்கள் அது சார்பாக தெளிவாக வலியுருத்தியிருப்பதாக நான் அறிகின்றேன்.

நேற்றைய பல்கலைக்கழகமாணவர்ளுடனான சந்திப்பு முற்றுமுழுதான வெற்றியில்லையென அறிகின்றேன்.

தற்போது தழிழ் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்கின்றனர். அதனை நாங்கள் ஏற்கமுடியாது. எம்மிடமுள்ள ஒரேயொரு ஜனநாயக ஆயுதம் வாக்கு. அந்தவாக்கைப்பயண்படுத்திதான் நாம் நியாயமான முடிவைப்பெற வேண்டும். பல துன்பியல்களை எதிர்கொண்ட சமூகம் ஒரு நிரந்தர தீர்வினை எட்டவேண்டும்.அதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

தேர்தலை பகிஸ்கரிப்பது என்பது ஒரு பிழையான நடவடிக்கையாக நான் பார்க்கின்றேன். 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தேர்தல் புறக்கணிப்பு ஒன்று நடைபெற்றது. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகவே கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது தவறான நடவடிக்கையென அப்போதைய சூழலில்கூறமுடியாத நிலையிருந்தது.

நாங்கள் நியாயமான கோரிக்கையினை முன்வைத்து எமது சகோதரர்கள் ஆயுத போராட்டம் மூலமாக ஒரு அரசியல் தீர்வினைப்பெறுவதற்காக போராடியபோது ரணில் விக்ரமசிங்க அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அலிஸாகீர் மௌலானாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளை பிரிக்கும் தந்திரோபாயத்தினை மேற்கொண்டார்.

அதற்காக ரணிலுக்கு பாடம் கற்பிக்குமுகமாகவே 2005ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள். அந்தநிலை இப்போது இல்லை. எங்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் வாக்காகும்.அந்த வாக்கினை பயன்படுத்தி நிலையான தீர்வினை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

என்னைப்பொறுத்தவரையில் தேர்தல் பகிஸ்கரிப்பு என்பது பிழையான முடிவாகும். எமது கட்சியும் தேர்தலைப்பகிஸ்கரிக்கின்ற முடிவுக்கு வராது என நினைக்கின்றேன்.

தமிழ் மக்கள் வீடுதலைப்புலிகள் கட்சி, கர்ணாஅம்மான் குழு, ஜெயானந்தமூர்த்தி முற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் உற்பட சில இதர கட்சிகள் கோட்டாபாயராஜபக்ஸ அவர்களை ஆதரிப்பதாக ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. அதிலே பலரை நாம் பார்க்கும் போது முன்பும் மகிந்த அவர்களோடு இனியும் மகிந்த அவர்களோடு இருப்பார்கள் அதில் மாற்றம் இல்லை.

ஜெயானந்தமூர்த்தி ஒரு கொள்கை இல்லாதவர், பல கட்சிகளுக்கு பாய்ந்துசென்று இப்போது கோத்தபாயவுடன் இணைந்துள்ளார். கொள்கையில்லாத ஜெயானந்தமூர்த்தியை நம்பி யாரும் வாக்களிக்க தயாரில்லை. பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்றவருடம் ஆட்சிமாற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது மகிந்தவுடனும் மைத்திரியுடனும் சென்றவர்.

மகிந்தவின் தொங்கு அரசாங்கத்தில் பிரதியமைச்சராகவும் இருந்தவர் அவரும் அங்கு செல்வது புதிய விடயம் அல்ல, அடுத்தபடியாக பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் அவர் மக்களிடம் காசு பறித்து அவுஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் அனுப்புவதாக கூறி அவர்களிடம் பணத்தினை பறித்து அதனை பலரிடம் பணத்தினை
திருப்பிக்கொடுக்காத நிலையில் பல தடவைகள் சிறைச்சாலை சென்று தண்டனை அனுபவித்தவர் பொதுஜனவின் அமைப்பாளராக இருக்கின்றார். இவர்களினை பற்றி நாங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

வடகிழக்கைப் பொருத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை
தீர்மானிக்கின்றதோ,அவருக்குத்தான் வடகிழக்கின் பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். இதுதான் உண்மை. அந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகின்றது. யார் நியாயமான அரசியல் தீர்வினை தமிழ் மக்களுக்கு வழங்கி தமிழ் மக்களின் நீண்டகால துன்பத்தினை தீர்ப்பதற்கான வழியை காட்டுவார்களோ அவர்களுக்கு ஆதரவினை வழங்குமாறு தமிழ் மக்களை கோருவோம் என்றார்.