வன்முறைகளை நிறுத்துமாறு மியான்மர் தலைவருக்கு கோரிக்கை

இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை மியான்மர் அரசு நிறுத்த வேண்டும் என தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த 10 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மியான்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்ட பின்னர் இராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலிங் தனது முதலாவது பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றிருந்தார்.

அங்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படுவதுடன், இராணுவ அதிகாரிகளும், பொது மக்களின் தலைவர்களும் பேச்சுக்களை மேற்கொள்வதுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மியான்மரின் இராணுவ ஜெனரல் ஏற்றுக்கொண்டுள்ளதாக தொவிக்கப்படுகின்றது.

மியான்மரில் இடம்பெற்ற இராணுவ புரட்சியின் பின்னர் அங்கு இடம்பெற்றுவரும் போராட்டங்களில் இதுவரையில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.