வடக்கு – கிழக்கில் நிலமை வழமைக்கு திரும்பவில்லை

வடக்கில் அரச அலுவலகங்களின் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவே இடம்பெற்று வருகின்றது. காலை 5 மணிமுதல் மாலை 8 மணிவரை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும்போதும் மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதில் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தபால் சேவைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போதும், குறைந்த அளவான பணியாளர்களை கொண்டு சேவைகளை மேற்கொண்டுவருவதாக வடமாகாண தபால் மாஅதிபர் மதுமதனி வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையிலான தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிழக்கு மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களில் மக்கள் அதிகளவு வீதிகளில் நடமாடுவதாகவும், ஆனால் அவர்கள் சுகாதர அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே செயற்படுவதாகவும் கிழக்கு மாகாண அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக பாதுகாப்பு அங்கிகள் அணியாதவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண சிறீலங்கா காவல்துறை பிரதி மா அதிபர் ஜெயவர்த்தனா தெரிவித்துள்ளார்.

ஆனால் தொழில்வாய்புக்கள் மற்றும் விவசாயம் என்பன பாதிக்கப்பட்டுள்ளதால் அன்றாடம் தொழில் செய்து தமது வாழ்க்கையை நடத்திவரும் பெருமளவான மக்கள் வறுமையில் வாடுவதாகவும் புலம்பெயர் அமைப்புக்களும், பல அரசியல் கட்சிகளும், புலம்பெயர் மக்களும் அவர்களுக்கு உதவிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.