வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் மண்பறிப்பு நடவடிக்கைகள்- நாடாளுமன்றில் சாந்தி

யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வடக்கு, கிழக்கில் தலைவிரித்தாடும் காணிகள் கையகப்படுத்தலினால், தமிழ் மக்களின் படுக்கை அறைகளில்கூட எமது நிலம் என எல்லைக்கல்லை வைக்குமளவுக்கு நிலை உள்ளது என்றார்.

தூங்கும் நிலைக்குச் சென்றுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகளைத் துரிதப்படுத்த வேண்டும்.  கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு இனம்,மதம் கடந்து உண்ணாவிரத போராட்டம் நடக்கின்றது. இந்நிலையில், மக்களிடையே வக்கிரத்தன்மையையும் மோதல்களையும் ஏற்படுத்துகின்ற வகையில் செயல்படுவதை அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) இடம்பெற்ற இலங்கை காணி மீட்டல் மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபன திருத்த சட்ட மூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காணி மீட்டல் என்பது யாரிடமிருந்து யார் காணியை மீட்பது என்ற கேள்வியை வடக்கு, கிழக்கு பகுதியை மையமாகக்கொண்டு கேட்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அவர், அங்கு மக்களுக்கு சொந்தமான காணிகள் பல்வேறு விதமான அதிகார சபைகளால், திணைக்களங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை மீட்டல் தொடர்பான ஒரு விவாதத்தை இங்கு முன்வைக்கவேண்டியுள்ளது என்றார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு காணி மீட்டல். இது சர்வதேச புகழ் பெற்ற ஒரு போராட்டமாக பரிணமித்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு மேலாக, அந்தக்காணிகளுக்கு உரிய ஆவணங்களை மக்கள் வைத்துக்கொண்டு இராணுவத்திடம் இருந்துதமது காணிகளை மீட்க போராடி வருகின்றனர். இந்தக்காணி மீட்டல் இதற்கு பொறுப்பானதாக அமைய வேண்டும். இது தொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்​கொண்டார்.

“மகாவலி ‘எல்’ வலய அபிவிருத்தி என்ற போர்வையில் யுத்த காலத்தில் கள்ளத்தனமாக ,கபடத்தனமாக வெளியிடப்படட வர்த்தமானிகள் மூலம் எங்கள் மக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கருக்கு மேற்பட்ட காணிககள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளை ,விளைநிலங்களை,மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை கையகப்படுத்தி மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகளை மீட்டெடுக்க வேண்டிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது” என்றார்.

வடக்கில், குளங்கள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அந்தக் குளங்களுக்கு கீழ் நீர் பாசனம் செய்ய வேண்டிய காணிகள் வனவளத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் எமது மக்கள் எவ்வாறு விவசாயத்தில் முன்னேறுவது? என கேள்வியெழுப்பிய அவர், கால் நடை வளர்ப்பு என்பது இந்த யுத்தத்தின் பின்னர் அங்கு சிறந்த வருமானம் தரும் தொழிலாக இருந்தாலும் அந்தக்கால்நடைகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு மேச்சல் தரைகளை ஒதுக்குமாறு நாம் கேட்கின்றபோது அந்த மேச்சல் தரைகள் கூட கையகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தனையும் மீட்டெடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஆக்கிரமிப்புகளிலிருந்து தமது காணிகளை மீட்டெடுக்க வேண்டிய நிலையிலேயே வடக்கு,கிழக்கு மக்கள் இன்றுள்ளனர் என்றார்.

முல்லைத்தீவில் அளம்பில் பகுதியில் பெண்ணொருவர், 10 பெண்களை வைத்து ஒரு தையல் கடையை நடத்தி வருகின்றார். அவர், நாலடி நிலத்தை தன்னுடைய தையல் தொழிலகத்தை கொஞ்சம் பெரிதாக அமைப்பதற்காக ஒரு கொட்டகையை அமைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்கவில்லை. ஆனால் 1000 ஏக்கர்களுக்கு மேல் எவ்வாறு இந்த மக்களுக்கு சொந்தமான காணிகள் கையகப்படுத்தப்பட்டது என்பது கேள்விக்குரிய விடயம் என்றார்.    “முல்லைத்தீவு செம்மலை நீராவிப்பிள்ளையார் கோவில் பிணக்கு. பல அமைச்சர்கள் வருகின்றீர்கள். பல ராஜதந்திரிகள் அங்கு வருகின்றீர்கள் இந்தக் கோவில் பரம்பரையாக தமிழ் மக்களாலேயே வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வரும் பிள்ளையார் கோவில். இந்தக்கோவிலில் அந்த மக்களை அபிவிருத்தி வேலைகளை செய்ய விடாது இந்தக்கோவிலின் அருகாமையில் ஒரு பௌத்த சிங்களக் குடும்பம் கூட இல்லாத நிலையில் அங்கு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது .இந்த புத்தர் சிலை அமைக்கப்படும்போதே நாங்கள் எத்தனையோ தடவைகள் ஜனாதிபதி,பிரதமர் மட்டங்களில் கூட இது ஒரு பொருத்தமற்ற வேலை, இது இன,மத முரண்பாட்டை தோற்றுவிக்குமென நாம் முறைப்பாடு செய்திருந்தோம். ாவற்றையும் மீறி அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டது” என்றார்.