லைக்கா நிறுவன முதலீடுகள் தொடர்பில் சிறிலங்கா அரசு மீள் பரிசீலனை

ஸ்ரீ லங்கா மிரர் என்ற சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி பாதுகாப்பமைச்சு இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,இலங்கையில் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிறுவனத்தை கொள்வனவு செய்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இருவர் கடந்த காலங்களில் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகள் கொண்டிருந்ததாக அந்த
செய்தி இணையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பென் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் இலங்கையின் சட்ட திட்டங்களினை மீறி சுவர்ணவாஹினி நிறுவனத்தின் 60 வீத பங்குகளை வாங்கியுள்ளதாகவும் மீதியான 40 வீத பங்குகளை ப்ளூ சம்மிட் கெப்பிட்டல் என்ற நிறுவனத்திற்கு மறைமுகமாக வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை கொள்வனவு செய்த பணிப்பாளர்கள் முதற்கட்டமாக இலங்கை பாதுகாப்பமைச்சின் கிளியரன்ஸை பெறவேண்டும் என்ற நிலைமை இருந்தபோதிலும் அதனை பெறாமல் முதலீடுகளை செய்திருப்பதையும் பாதுகாப்பமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் லைக்கா நிறுவனம் இலங்கையில் செய்த முதலீடுகளை மீள்பரிசீலனை செய்யவும் , ஏற்கனவே அவர்களால் வேறு நிறுவனத்தின் பெயரில் பெற்ற சுவர்ணவாஹினி தொலைக்காட்சி உரிமங்களை மீளப் பெற்று அவற்றை அரசுடைமையாக்குவது குறித்தும் அரசு கவனம் செலுத்திவருவதாக சொல்லப்படுகிறது.

இந்த கொடுக்கல் வாங்கல்களை செய்த அரசியல் பிரமுகர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்படுகிறது.