ரஷ்ய எதிர்கட்சி தலைவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை!

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி. இதனால் புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்சி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வந்தார்.

இதையடுத்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நச்சு தாக்குதல் காரணமாக  கோமா நிலைக்கு சென்ற அவர் ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்  உயிர் பிழைத்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் திகதி நவால்னி ரஷயா திரும்பிய போது மாஸ்கோ விமான நிலையத்தில் வைத்து  மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நவால்னி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அலெக்சி நவால்னி மீதான வழக்கு மாஸ்கோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில் நவால்னிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில் இருந்ததால், அதற்கு ஏற்ற வகையில் இந்த தண்டனைக் காலம் குறைக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் நவால்னிக்கு ஆதரவாக அவரை விடுதலை செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.