ரஞ்சனின் குரல் பதிவுகள் வெளியிடுவது நிறுத்தம்! முக்கிய பிரமுகர்கள் சிக்கும் அபாயம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் எனக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாதிவெல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வைத்து ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது அவரிடமிருந்து இறுவெட்டுக்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு கைப்பற்றப்பட்டிருந்த இறுவெட்டுக்களிலுள்ள முக்கிய குரல் பதிவுகள் அடுத்தடுத்து வெளியாகி இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த விடயம் தொடர்பாக ஆராயக் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்தநிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகின்றது. முக்கிய பிரமுகர்களாக இருக்கும் பல பெண்கள், ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி ஊடாகப் பாலியல் தொடர்புகளை வைத்திருந்தனர் எனச் சந்தேகிக்கப்படும் குரல் பதிவுகள் கிடைத்துள்ளமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பெண்களில் மக்கள் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரபலமானவர்களின் மனைவிமார், தனியார், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பிரபல பெண் கலைஞர்களும் உள்ளடங்குகின்றனர் எனக் கூறப்படுகின்றது.

இந்தக் குரல்பதிவுகள் வெளியானால் எதிர் மற்றும் ஆளும் தரப்பைச் சேர்ந்த பலரும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் அவற்றை வெளியிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக்கூறப்படுகின்றது.