கோட்டாவை வசியம் பண்ண முரண்பாடக பேசும் சம்பந்தன்: அம்பலப்படுத்தும் ஆனந்தன்

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பெரும் அரசியல் இடைவெளி ஏற்பட்டுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தங்களுடைய பக்கம் வசியம் செய்வதற்காகச் சம்பந்தன் முன்னுக்குப் பின் முரணாக -இராஜதந் திரமற்ற வகையில் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடனது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்பின் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அரசியல் இடைவெளி ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்துக்கு நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடே காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் கூறிய அந்த நிலைப்பாட்டுக்கு ஏற்பவே தமிழ் மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தனர் என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

புதிய ஜனாதிபதி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருக்கக் கூடிய மாகாண சபைக்குரிய அதிகாரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனக் கூறியுள்ள நிலையில் தமிழ் மக்களது நீண்டகாலத் தேசிய பிரச்சினைகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலை தொடர்கிறது.

ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரண்டு நாள்கள் விவாதம் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜனாதிபதி ஒரு அரசியல்வாதி அல்லர், அவர் உண்மையைப் பேசுகிறார். ஆகவே அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றத் தயாராக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.

உண்மையில் சம்பந்தன் மூத்த அரசியல்வாதி. நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறார். அரசியல்வாதி அல்லாத ஒருவர் உண்மையைப் பேசுகிறார். அவர் எல்லாவற்றையும் செய்வார் என கூறினால், சம்பந்தன் இவ்வளவு காலமும் அரசியல்வாதியாக இருப்பதால் தமிழ் மக்களுக்குப் பொய்யா கூறி வருகிறார் அவர் பொய் தான் கூறுகின்றார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆகவே சம்பந்தனின் கூற்றுப்படி அரசியல்வாதி அல்லாத கோட்டபாயவுக்கு வாக்களித்த சிங்கள மக்கள் உண்மையானவர்களாகவும், அரசியல்வாதியான சஜித் பிரேமதாஸவை ஆதரித்த தமிழ் மக்கள் பொய்யர்கள் என்றும் கருத்துப்படத்தான் அவர் கூறியுள்ளார். ஆகவே, புதிய ஜனாதிபதியைத் தங்களுடைய பக்கம் வசியம் செய்வதற்காகச் சம்பந்தன் முன்னுக்குப் பின் முரணாக -இராஜதந் திரமற்ற வகையில் மேற்கொள்ளும் இந்தச் செயற்பாடனது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.”