யு.எஸ்.எய்ட்டின் திட்டங்கள் தொடர்பில் விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ

‘யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ‘யு.எஸ்.எய்ட் அமைப்பின் நிதியிலிருந்து பயனடைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கணக்குகள் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘மனிதாபிமான உதவி என்ற பெயரில் ஏனைய நாடுகளில் குழப்பத்தையும் ஸ்திரமற்ற நிலையையும் உருவாக்க யு.எஸ்.எய்ட் அமைப்பின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன’ என்று நாமல் ராஜபக்ஷ தமது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இலங்கை அண்மைய ஆண்டுகளில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திடமிருந்து மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்றுள்ளது’.

‘இதேவேளை, 100இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் இந்த அந்த அமைப்பிலிருந்து பயனடைந்துள்ளனர்’. ‘இருப்பினும், இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை’ என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ‘வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை பேணி, அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவி தொடர்பான விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியிலுள்ள யு.எஸ்.எய்ட் எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகத்தின் பணியாளர்கள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் நிர்வாக விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ள அந்த முகவரகம், தமது அனைத்து பணியாளர்களும் அமெரிக்காவுக்கு மீள திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.