யாழ். பொது நூலகம் எரியூட்டப்பட்டு 45 ஆண்டுகள் நிறைவு

ஈழத் தமிழரின் அறிவு வங்கியாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

1981 ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான மதிப்புமிக்க இலக்கிய வரலாற்று ஆவணங்கள் அழிந்த நிலையில் இந்த சம்பவம் தமிழ் மக்களுக்கு பண்பாட்டு இழப்பின் வலிமிகு அடையாளமாக மாறியது.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்ட நிலையில் அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஜூன் முதலாம் திகதியும் இரவு யாழ்ப்பாணத்திலிருந்த கடைகள் பல தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து அறிவுப் பேராலயமாக விளங்கிய யாழ்ப்பாண பொதுசன நூலகத்தை சிங்களப் பேரினவாத கும்பல் ஒன்று திட்டமிட்டு கொளுத்தியது.

1998ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் மீள்கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில் 2004 பெப்ரவரி 23ஆம் திகதி நூலகம் பொதுமக்களுக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது யாழ். பொது நூலகம் நவீன மயமாக்கப்பட்டு அனைத்து நூல் தேவைகளையும் இணையத்தின் வாயிலாக செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.