‘யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் தெரிவித்தார்.
5 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.
மோசமான செயல்களிலே ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பதவி விலகிய கலைப் பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் முன்வைத்த கோரிக்கை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்”
‘பேராசிரியர் ரகுராம் தனது பதவி விலகலினை மீளப் பெற்று மீண்டும் பீடாதிபதிப் பொறுப்பினை ஏற்பதற்கு உரிய ஒரு சூழலினைப் பல்கலைக்கழக நிர்வாகம் பல்கலைக்கழகத்திலே ஏற்படுத்த வேண்டும்.’ என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ‘மாணவர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற பேரவைக் கூட்டத்திலே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உடனடியாக மீளப் பெறப்படல் வேண்டும்’ என்றும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் அவசர பேரவை கூட்டம் இன்று (29) இடம்பெற்றது.
ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு சாதகமான பதிலை வழங்குவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்பட்ட நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் நாளை (30) கூடவுள்ளது.
இதன்போது தங்களது வகுப்பு புறக்கணிப்பை நிறைவு செய்வது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.



