ஜனாதிபதி அனுரவின் வடக்கு விஜயம் – ஐவருக்கு எதிராக தடையுத்தரவு கோரும் காவல்துறை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு விஜயத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட ஐவர், ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் யாழ் நீதவான் நீதிமன்றில் இன்று (29) இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அன்று இடம்பெறவுள்ள யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் அவர் குறித்த கூட்டத்தில் பங்குபெறவுள்ள வேளையில் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒழுங்கு செய்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன், தற்காலிக சுகாதார உத்தியோகத்தர் சங்கத் தலைவர் எஸ்.ஜெஸ்மின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தங்களது தரப்பு வாதத்தினை நாளைய தினம் (30) நீதிமன்றில் முன்வைக்குமாறு குறித்த 5 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.