யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! – அகிலன்

யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசியான ‘சினோ பார்ம்’ தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்டு விட்டது. முதற்கட்டமாக 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியத் தயாரிப்பு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கலை அடுத்து, முற்றுமுழுதாக சீனத் தடுப்பூசிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கும் சீனத் தடுப்பூசி அனுப்பப்படுவது ஆச்சரியமானதல்ல.

ஆனால், இதிலும் அரசியல் ஒன்றிருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன. தடுப்பூசி வழங்கலில் யாழ். மாவட்டம் அடுத்த கட்டத்திலேயே இருந்தது. அதாவது அடுத்த வாரமளவில்தான் யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடாகியிருந்தது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவின் திடீர் உத்தரவொன்றையடுத்தே அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

தடுப்பூசி வழங்கலில் வட பகுதி புறக்கணிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் முன்வைத்திருந்தார். இதன்மூலம் மற்றொரு இனப்படுகொலைக்கு அரசாங்கம் திட்டமிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். அதனைவிட தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனும் வடக்கு – கிழக்குப் பகுதி மக்களுக்கு இந்தியத் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

10 1 யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! - அகிலன்

இந்தப் பின்னணியில், “உங்களுக்குத் தடுப்பூசியை வழங்குவதற்கு இந்தியா முன்வரப் போவதில்லை. சீனாதான் உங்களுக்குத் தடுப்பூசியை வழங்கப் போகின்றது” என்ற உணர்வை தமிழ் மக்களிடம் ஏற்படுத்தும் ஒரு உபாயமாகத்தான் இதனை அரசாங்கம் செய்கின்றது. இந்த நிலையில் குறித்த நிகழ்வினை பெரியளவில் காண்பிப்பதற்கு சீன சார்பு ஊடகங்கள் திட்டமிட்டுச் செயற்பட்டன.

வட மாகாணத்தினைப் பொறுத்த வரையில் அனைத்து இடங்களிலும் இந்தியத் தரப்பே முன்னின்று செயற்பட்டு வரும் நிலையில், முதல் தடவையாக சீனாவின் பங்களிப்பு ஒன்று வடக்குக்கு வருவதை பிரமாண்டமாகக் காட்டிக் கொள்வதற்கு சீனா விரும்பியதாகத் தெரிகின்றது. அதே வேளையில், இந்தியா தடுப்பூசிகளைத் தரமுடியாத நிலையில், ஆபத்தில் உதவும் நண்பனாக சீனா தான் உள்ளது என்பதை தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டிய அரசியல் தேவை ஒன்று கோட்டாபய அரசுக்குள்ளது.

இந்தியாவிடம் தடுப்பூசியைக் கேட்டவர்களுக்கான பதிலடியாகவும் இதனை அரசாங்கம் மேற்கொள்கின்றது. இதனை மேலும் பிரமாண்டமாகக் காட்டுவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்சவை இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக அனுப்பி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.

இதேவேளையில் தமிழ் மொழியின் இடத்தை ஆக்கிரமிப்பதாக சீனத் தூதரகத்தின் மீது அண்மைக் காலமாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் வெளிவந்துள்ள பதிவு ஒன்று பல அர்த்தங்களைக் கொடுக்கின்றது. “ஆபத்தில் உதவும் நண்பனே உண்மையான நண்பன்” – இலங்கையிலுள்ள சீன தூதர் ச்சி சென்ஹோங். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சினோ பார்ம் தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கையளிக்கும் நிகழ்வின் போது சீனத் தூதுவர் சொன்ன வாசகம் அது! அதனை இப்போது தமிழில் போட்டிருப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது புதிய செய்தியைச் சொல்ல சீனா விரும்புகின்றதா?

நெருக்கடியான தடுப்பூசி

Sinopharm.0 யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! - அகிலன்

இலங்கையில் கொரோனா பரவலும், அதனால் ஏற்படும் மரணங்களும் அசுர வேகத்தில் அதிகரித்துச் செல்லும் நிலையில், தடுப்பூசி விவகாரம் அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தினசரி மக்கள் போராட்டங்கள், பணிப் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் என வெளிவரும் செய்திகள், முடங்கிப்போயுள்ள நிலையிலும், இலங்கையின் அரசியலை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைக் காண்பது என்பதில் அரசாங்கம் குழம்பிப் போயுள்ளது.

இலங்கையின் சுகாதாரத்துறை தெற்காசியாவின் சிறந்த கட்டமைப்பைக் கொண்ட ஒரு சுகாதாரத் துறையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும், தற்போது வரையறுக்கப்பட்ட வளங்களை வைத்துக் கொண்டு வரையறையின்றி அதிகரித்துச் செல்லும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறை தடுமாறுகின்றது.

இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலை இந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பிட்ட பகுதிகளுக்குள் அதனைக் கட்டுப்படுத்த முடிந்தது. அத்துடன் தொற்றாளர்கள், மரணிப்போர் எண்ணிக்கையும் குறைவானதாகவே இருந்தது. அதாவது தொற்றாளர்கள் தினசரி சுமார் 100 – 200 இற்குள்தான் இருந்தனர். மரணிப்போர் தொகையும் தினசரி 4 அல்லது 5 இற்குள்தான் இருந்தது. இப்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை தினசரி சுமார் 3,000 வரையில் செல்கின்றது. தினசரி மரணிப்போரின் எண்ணிக்கையும் சராசரியாக 35 இற்கு மேல் சென்று விட்டது.

கொரோனா பரவலைத் தடுப்பதற்கு பொது மக்கள் எந்தளவுக்கு சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடிக்கின்றார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை பொது மக்கள் முற்றாக இழந்து விட்டார்கள் என்பது இப்போது வெளிப்படையாகியிருக்கின்றது. முதலாவது அலையைக் கட்டுப்படுத்தியதன் மூலம், மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு சற்று உயர்வடைந்திருந்தது என்பது உண்மை. ஆனால், இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் சொதப்பி விட்டதாகவே மக்கள் கருதுகின்றார்கள்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை முன்பாகவும், பொரளை லேடி றிட்ஜ்வே மருத்துவமனை முன்பாகவும் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற சம்பவங்கள் தடுப்பூசி விவகாரத்தில் அரசின் மீது மக்கள் எந்தளவுக்குச் சீற்றமடைந்து இருக்கின்றார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

‘அஸ்ட்ரா செனெகா’ தடுப்பூசியை முதலாவது கட்டத்துக்குப் போட்டவர்கள் அதனை இரண்டாவது கட்டத்துக்கு போடுவதற்கு தடுப்பூசி இல்லை. சுமார் ஆறு லட்சம் பேர், இரண்டாவது கட்டத் தடுப்பூசிளைப் போடவேண்டிய காலம் கடந்துவிடும் நிலையில் உள்ளனர். லேடி றிட்ஜ்வே வைத்தியசாலையில் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தியையடுத்தே சுமார் மூவாயிரம் பேர் அந்த இடத்தில் அவசரமாகக் கூடினார்கள். கொரோனா கால நடைமுறைகளுக்கு முரணாக – சமூக இடைவெளி உட்பட எதனையும் கணக்கில் எடுக்காமல் கூடிய அவர்களைக் கலைப்பதற்கு பொலிஸாரால் முடியவில்லை.

இரகசியமாக – அரசியல் செல்வாக்குள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக அங்கு கூடிய மக்கள் குற்றஞ்சாட்டினார்கள். அதனைவிட, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களுக்கு அஸ்டா செனெகா தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது சாதாரண பொது மக்கள் புறக்கணிக்கப்பட்டு அரசியல் – மருத்துவத் துறையில் செல்வாக்கானவர்களின் குடும்பங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றார்கள்.

இதனைவிட, தனியார் மருத்துவமனைகளில் இவ்வகைத் தடுப்பூசி 5,000 ரூபாவுக்கு விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குற்றச்சாட்டுக்களை அரசு மறுதலித்தாலும் பொதுமக்கள் நம்பத் தயாராகவில்லை என்பதைத்தான் நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் குடும்பத்தவர்களிற்கு அஸ்டா செனெகா தடுப்பூசி வழங்கப்பட்டமை உட்பட சுகாதார அமைச்சின் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான கல்லூரியின் தலைவர் ரவி குமுதேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடுப்பூசிகளை வழங்குவதில் முன்னிலைப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமோ அல்லது  இலங்கை அரசாங்கமோ ஒருபோதும் தெரிவிக்கவில்லை என ரவி குமுதேஸ் சுட்டிக் காட்டுகின்றார்.

இலங்கையில் அஸ்டா செனெகா இரண்டாவது கட்டத் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளில் பாரிய முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் இடம் பெற்றுள்ளன என இலங்கையின் முன்னணித் தினசரிகளில் ஒன்றான ‘டெய்லி மிரர்’ கூட தெரிவித்திருக்கின்றது. சுகாதார அமைச்சு உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை, மாறாக சுகாதார அமைச்சினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தடுப்பூசியை வழங்கினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.

191680919 4873295676020552 3205230903641797113 n யாழ்ப்பாணத்தில் சீனத் தடுப்பூசி! - அகிலன்

முன்னிலை பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், தடுப்பூசி அவசரமாக தேவைப்படுபவர்களுக்கும் வழங்குவதற்காக சேமித்து வைக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான தடுப்பூசிகளையே இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகளின் குடும்பத்தவர்களிற்கு வழங்கியுள்ளனர்.

இரண்டாவது கட்டத்துக்கு அவசியமாக உள்ள 600,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு எப்போது கிடைக்கும் என்பது குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை பதில் இல்லை. நாங்கள் கடினமாக முயல்கின்றோம் என்பது மாத்திரமே பகிரங்கமாக தெரிவிக்கப்பட்ட  பதிலாக காணப்படுகின்றது. இரண்டாவது கட்டத்துக்கு தடுப்பூசி கிடைக்கா விட்டால், முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்தும் சுகாதார அதிகாரிகளிடமிருந்து எந்தவித தெளிவான பதிலும் இல்லை.

இந்த நிலையில்தான் முதலாவது கட்டத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட ஆறு லட்சம் பேரும் குழப்பத்தில் உள்ளார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கக் கூடியவர்களாக யாரும் இல்லை. அரசாங்கம் சொல்லும் பதில்கள் தெளிவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக குழப்பங்களைத் தான் அதிகரிக்கின்றது. கொரோனா விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்து விட்டது என்பது மட்டும் வெளிப்படையாகத் தெரிகின்றது.