மோடி- கூட்ட்டமைப்பு 7 நிமிட சந்திப்பு,இந்தியா வருமாறு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சந்திப்பின் தொடக்கத்தில், மோடியின் இரண்டாவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றத்திற்கு இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார் மோடி.

முன்னதாக திட்டமிட்டதை விட குறைவான நேரமே இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பிற்கு முன்னதாக இடம்பெற்ற மஹிந்தவுடனான சந்திப்பு சற்று நேரம் அதிகமாக இடம்பெற்றதால், இந்த சந்திப்பு சுமார் 7 அல்லது 8 நிமிடங்கள் அளவிலேயே இடம்பெற்றது.

சுதந்திரத்திற்கு பின்னரான அரசியலமைப்பு தமிழ் மக்களிற்கு எதிராகவே அமைந்துள்ளதை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்தில் வாழ இந்தியா ஆகக்கூடிய கரிசனை எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது.

இந்த கோரிக்கையை மிக கூர்மையாக கேட்டுக் கொண்டிருந்த மோடி, “இது பற்றி என்னிடம் ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறீர்கள்“ என குறிப்பிட்டதுடன் இந்தியாவுக்கு வருமாறும் அதுபற்றி விரிவாக பேசலாமென்றும் குறிப்பிட்ட மோடி, கூட்டமைப்பின் பயண ஏற்பாட்டை உடனடியாக மேற்கொள்ளும்படி அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகளிடமும் குறிப்பிட்டார்.

பின்னர், பலாலி விமான நிலையத்தை பற்றியும் கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். முதலில் சிறிய விமானங்களையாவது சேவையில் ஈடுபடுத்தலாம் என கேட்டுக் கொண்டனர். இதை செவிமடுத்த மோடி, இதில் கவனம் செலுத்தும்படி தூதரக அதிகாரிகளிடம் குறிப்பிட்டார்.