மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற கடும் மோதல் எரியுண்ட நிலையில் உடல்கள்

மெக்ஸிகோவில் போதைப் பொருள் கடத்தல் ஆயுததாரிகளுக்கும் மெக்ஸிக்கோ பாதுகாப்புப் படையினருக்குமிடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சிறையிடப்பட்ட மெக்ஸிக்கோவின் பிரபலமான போதைப் பொருள் கடத்தல் தலைவரான எல்-ஷப்போவின் மகன் ஒவிடியோ குஸ்மான் லூபேஸ், பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டதையடுத்து, அவரது குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள் இத்தாக்குதலையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

காவல்துறையினர் மீது கடும் தாக்குதல்களை தொடுத்த ஆயுததாரிகள், பல வாகனங்களை தீயிட்டுக் கொழுத்தினர். எரியுண்ட நிலையில் சில உடல்கள் காணப்படும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக தமது காவலில் இருந்த ஒவிடியோ குஸ்மான் லூபேசை காவல்துறையினர் விடுவித்தனர்.

இத்தாக்குதல்களையடுத்து, மெக்ஸிக்கோ அரச தலைவர் அன்ரே மனுவல் லூபஸ் பாதுகாப்புத் தரப்புடன் அவசர கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த வாரம் போதைப் பொருள் கடத்தல் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 14பேர் பலியாகியுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.