முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

விரிந்த செயற்திட்டமொன்றுக்கான ஆதார சுருதியுரை;

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான ஈழத்தமிழ் மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பது சிறிலங்கா ஈழத்தமிழர்களாகிய தங்களின் உயிர்க்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் ஏற்படுத்தி வந்த இனங்காணக் கூடிய அச்சத்தில் இருந்து தங்களை முப்பது ஆண்டுகாலமாகக் காத்துவந்த தங்களின் நடைமுறை அரசின் ஆயதங்கள் மௌனித்த சூழ்நிலையில், யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு என்னும் முப்பரிமாண படைபலத்திட்டத்தின் மூலம், மீளவும் தங்களின் அரசியல் பணிவை ஆயுத முனையில் பெறும், அதே அரசின் கீழ் எப்படித் தங்கள் உயிரையும் உடமைகளையும் நாளாந்த வாழ்வையும்,சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற அடிப்படையில் பேணுவது என்பதேயாகும்.

ஆயுதங்கள் மௌனித்த புதிய நிலையில் சமூக ஒன்று திரட்டலே பாதுகாப்பு தரும்

எந்த சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளமன்ற சர்வாதிகார சனநாயகத்தால் தங்களின் பத்திலொரு பகுதி மக்கள் தொகை இனஅழிப்புக்கு உள்ளாக்கப்பட்டதோ, அதே சிங்கள பௌத்த பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றச் சர்வாதிகார சனநாயகத்தில் எந்த மாற்றமும் இன்றி அது இன்னும் வேகப்பட்டிருக்கும் நடைமுறை யதார்த்த நிலையில் ஈழத்தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசென உலகநாடுகள் கூறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் அவர்களால் தங்களுக்கான அமைதியான பாதுகாப்பையோ வளர்ச்சிகளையோ பெற்றுக் கொள்ள இயலாதுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், இலங்கையில் இனப்பிரச்சினையே இல்லை, அரசியல் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, சிங்கள பௌத்த பேரினவாதம் எதனைச் செய்கிறதோ அதனை ஏற்று வாழவைப்பதே அரசின் கொள்கையும் கோட்பாடும் அதனை எவ்விதத்திலும் மீறி பெரும்பான்மையினர்க்கு எதிராகச் செயற்பட முடியாது,இலங்கையின் தேசிய கீதம் கூட தமிழில் பாடப்படக் கூடாது, இலங்கையில் சிறிலங்காப்படைகளின் மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக்குற்றங்கள், இனஅழிப்பு என்பவற்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி விசாரணைகளோ பாதிப்புற்றவர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வோ கிடையாது, அவை யாவுமே யுத்தத்தின் விளைவாகக் கருதப்பட வேண்டும், என்றெல்லாம் இலங்கையிலும் இந்தியாவிலும் ஐக்கியநாடுகள் சபை முன்பும் பிரகடனப்படுத்தி வரும் சிறிலங்கா அரசாங்கத்தை எப்படி அவ் அரசாங்கம் ஈழத்தமிழர்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசாங்கம் எனக் கருதமுடியும்? என்று எண்ணுகையில் ஈழத்தமிழர்களின் வெளியக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அம்மக்கள்தங்களின் நாளாந்தப் பிரச்சினைகளை உலக நாடுகள் இடம் எடுத்துக் கூறியே தீர்வு பெற வேண்டிய நிலை இன்றைய அவர்களின் யதார்த்த நிலையாக உள்ளது.DXat6JyUMAEWDnP முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

இந்தப் புதிய சூழ்நிலையை ஈழத்தமிழ் மக்களின் ‘சமூகஒன்றுதிரட்டல்’ (Social Mobilization) வழியாக அவர்களை ஓரணியில் நிற்க வைத்து,அவர்களின் நாளாந்த வாழ்வின் பிரச்சினைகளை அனைத்துலக மக்களுக்கும்,அனைத்துலக அமைப்புக்களுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும்,உண்மையும் நேர்மையுமான முறையில் உடனுக்குடன் தெரிவிப்பதற்கான சனநாயக வழிகள் மூலம் அவர்களை எடுத்துரைக்க வைப்பதன் மூலமே பெறவைக்கலாம். இதற்கு உதவ வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளவர்களாக உலகெங்கும் உள்ள புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர்.

சமூக ஒன்று திரட்டலுக்கான படிமுறைகள்
வழியாக உருவாவதே சிறந்த தலைமை

சமூக ஒன்று திரட்டலுக்கு,மக்களின் சமுக,பொருளாதார, அரசியல்,ஆன்மிக தேவைகளைக் கண்டறிதல்இ அந்தத் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடல்,அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஆள்பலத்தையும், நிதிவளத்தையும், கருவிகளையும் இணைத்தல், செயற்பாட்டின் தடைகளையும் வளர்ச்சிகளையும் கண்காணித்தல்,மதிப்பீடு செய்தல் என்னும் படிமுறைகள் மக்கள் சார்பான கீழிருந்து மேலான அணுகுமுறை மூலம் செய்யப்பட வேண்டும்.

இதனை வறுமையையும் அறியாமையையும் அகற்றுவதற்கான அடித்தளப் பணிகளில் இருந்து ஆரம்பித்து, சமுதாயக் கூட்டங்களைக் கூட்டி, பங்கேற்பவர்களுக்கு அவர்களின் நடிபங்கு குறித்த பயிற்சிகளை அளித்து, ஒன்று திரட்டல் செயற்பாடுகளை வேகப்படுத்தி,அதனை மதிப்பீடு செய்து,தேவையான முறையில் மீளமைத்து,சமூகத்தை மையமாகக் கொண்ட மக்கள் அமைப்பினை உருவாக்க வேண்டும்.

இந்த அமைப்பை மக்களுடன் ஒருங்கிணைத்தல் மூலம் சமூகத்தைப் படித்து,பிரச்சினைகளைப் பகுப்பாய்வு செய்து,அதன் அடிப்படையில் விரிவான தற்காலிக திட்டமிடல் ஒன்றை அமைத்து,அதனைச் செயற்படுத்தக் கூடிய மையக்குழுவை உருவாக்கி, தொடங்கப்பட்ட அடித்தளப்பணிகள் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் அமையும் படி முகாமைப்படுத்துகையில் தான் சமுக ஒன்று திரட்டல் என்பது மக்களுக்குச் சத்தியளிக்கும் ஒன்றாகவும் சமுகவிலக்குகளை சமுக உள்வாங்கல்களாக மாற்றும் வல்லமை வாய்ந்ததாகவும் அமையும்.
இந்த சமூகத்தை ஒன்று திரட்டும் பணி சிறிய குழுக்கள் குழுக்களாகத் தொடங்கப்பட்டு அவைகளின் வெற்றிகளால் நம்பிக்கையூட்டப்படல் அவசியம்.unnamed3W5QDXJ6 முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் பெருங்குழுக்களாக அவை இயல்பான வளர்ச்சி பெறுவதை ஊக்குவிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த சமுக ஒன்று திரட்டல் பணியில் ஒவ்வொருவரும் அக்கறையும் ஆர்வமும் கொண்டு இணைந்து விடாமுயற்சியுடனும் நிலைப்படுத்தும் வேகத்துடனும் செயற்படுவர். இந்த உளப்பலமே மக்கள் சார்பாகப் பேரம் பேசும் ஆற்றலை இயல்பாகத் தோற்றுவிக்கும். இந்த விட்டுக்கொடாது பேரம்பேசும் ஆற்றலே உள்ளார்ந்த ஆற்றலுள்ள தலைவர்களைத் தோற்றுவிக்கும். இந்த சமூக ஒன்று திரட்டல் மூலமாக உருவாகும் உள்ளார்ந்த தலைவர்கள்தான் தன்னலத்தை மீறி பொதுநன்மைக்காக உழைக்கும் சிறந்த சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தலைவர்களாக இனங்காணப்படுவர்.

இந்தத் தலைமைகளின் வழியாகவே மக்கள் சார்பான மக்களுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாத சிறந்த தலைமை ஒன்று ஒரு பின்னடைவின் பின்னர் மீளவும் மக்களை முன்னோக்கி நகர்த்தத் தோன்றும்.

இந்த விட்டுக்கொடுக்காத தலைமை ஈழத்தமிழரிடை உருவாவதற்கு புலம்பெயர் ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் குடிமக்கள் என்ற உரிமையுடன் அந்த அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப, ஈழத்தமிழ் மக்களை எல்லைப்பட்ட மக்கள் களாக (Vulnerable people) என்னும் இன்றைய நிலையிலிருந்து விடுவிக்க தம்மால் இயன்றதைச் செய்ய உள்ள உறுதி கொள்ள வேண்டும்.

புலம்யெர் தமிழர்களின் தாயக உதவிகளின்
முள்ளிவாய்க்கால் பின்னரான முக்கியத்துவம்

சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இலங்கையில் ஈழமக்கள் மேலான இனஅழிப்பு யுத்தநடவடிக்கைகளால் பாதிப்புற்ற மக்களை எல்லைப்படுத்தப்பட்ட மக்களாக (Vulnerable people) மாற்றுவதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல அவர்களின் சந்ததிகள் கூட போராட்ட குணமில்லாதவர்களாக மாற்றப்பட வேண்டுமென்னும் செயற்திட்டத்தையும் மிகக் கவனமாக நடைமுறைப்படுத்தியது.

ஈழத்தமிழர்களிடை தாழ்வுச்சிக்கலை (Inferiority complex) வளர்க்கும் அதே வேளையில் சிங்கள பௌத்தர்களிடை உயர்வுச்சிக்கலை ( Superiority Complex) ஊக்குவித்து அதன் வழி, ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க முடியாத (voiceless) மக்களாகத் தாம் மாறிவிட்டார்கள் என்றும், தம்மேல் யாராலும் அக்கறை காட்ட இயலாது என்பதுமான சமுகஉளவியலை உருவாக்குவதன் மூலம், அவர்களை பேசாமல் இருந்தாலே போதும் என்னும் கலாச்சாரத்துள்  (Culture of Silence) வாழவைத்து, சிங்கள பௌத்த அரசாங்கத்தில் முற்று முழுதாகத் தங்கி வாழும் நிலையை (Dependency) ஏற்படுத்துதல் மூலம் அடக்கி ஒடுக்கி ஆளும் தந்திரோபாயத்தையும் அரசியல் செயற்திட்டமாகக் கையாளத் தொடங்கினர்.

இந்தச் செயற்திட்டத்தின் அதி முக்கிய இலக்காகவே தாயக ஈழத்தமிழ் மக்களையும் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்களையும் பல்வேறு முறைகளில் பிளவுபடுத்துதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்காகப் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்கள் பயங்கரவாதத்திற்கு துணைசெய்பவர்கள் என்ற கருத்தியல் ஒன்றை உலகெங்கும் பரப்புரைசெய்து புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களின் தாயகம் நோக்கிய சுதந்திரமான ஈடுபாடுகளையும், அக்கறைகளையும்,உதவிகளையும் அவரவர் வாழும் நாடுகளிலேயே மட்டுப்படுத்துவித்தல்; அல்லது தடைசெய்வித்தல் என்பதை அரசாங்கங்களுடன் அரசாங்கம் என்கிற உட்தொடர்பு மூலம் சாதித்தல், புலம்பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களின் தாயகம் குறித்த உதவிகளைச் செய்யும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் அவர்களது நேர்மையான செயற்பாடுகள் குறித்த சந்தேகங்களையும், சகோதரத்துவப் பகைமைகளையும், செயற்பாட்டாளர்கள் மேல் வெறுப்புகளையும் இயலுமான அளவுக்கு வளர்த்தல், போன்ற பலவித தந்திரோபாயங்களை சிறிலங்கா இன்று வரை தொடர்கிறது.625.500.560.350.160.300.053.800.900.160.90 1 முள்ளிவாய்க்காலின் பின்னரான ஈழத்தமிழர் வாழ்வியல் பிரச்சினைகளும் எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும்-சூ.யோ.பற்றிமாகரன்

இதன்வழி புலம்பெயர் மக்களின் வழிகாட்டல்கள் உதவிகள் தாயகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு உரியகாலத்தில் உரிய முறைகளில் கிடைக்காதவாறு தடுத்து,ஈழத்தமிழ்மக்களை எல்லைப்படுத்தப்பட்ட (Vulnerable people) மக்களாகவே தொடர்ந்து வாழவைக்க சிறிலங்கா இன்றுவரை தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

இந்நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசுக்களுக்கு ஈழத்தமிழரின் நாளாந்த வாழ்வில் அவர்களின் எல்லைப்படுத்தப்பட்ட நிலையை எடுத்துரைப்பதற்குப் புலம்பெயர் தமிழர்கள் ஒரு அணியில் தம்மை இணைத்து பொதுவான செயற்திட்டம் ஒன்றை உருவாக்கி,பொதுவேலைத் திட்டங்களை தங்களிடை உள்ள மாறுபாடுகள் வேறுபாடுகள் அதற்குத் தடையாக அமையாதவாறு,ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உள்ள மாறுபாடுகளை மதித்து (Value the Diversity), பொதுவேலைத்திட்டங்களை முன்னெடுக்க முழுமூச்சுடன் ஒத்துழைக்க வேண்டும்.

இந்நேரத்தில் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களுக்கான இலாபநோக்கற்ற முழுநேர காணொளி கேளொலி நாளிதழ் உட்பட்ட திரள்நிலைச் சாதனம்(Mass Media)  முதன்மை பெறுகிறது. புலம்பெயர் தமிழர்களுக்கான வங்கி ஒன்றும் நடைமுறைச் செயற்பாட்டுக்கு அவசியமாகிறது.

இவ்விடத்தில் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்தில் ஈழத்தமிழ் மக்களின் சமுகஒன்று திரட்டலுக்குத் தனித்த நிலையிலும் சிறுசிறு குழுக்களுக்கு அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து உதவி அங்கு மாற்றங்கள் இயல்பாக வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதனைப் புலத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்குச் சான்றாதாரப்படுத்தும் பொழுது தான் நம்பிக்கை,தொண்டார்வம் என்பவற்றுடன் மூலவளப் பகிர்வுகளுக்கான தொழில்நுட்ப உதவிகளுக்கான அறிவியல் பரிமாற்றங்களுக்கான மனிதவலு இணைப்புகளுக்கான மன உந்துதல்களும் வேகம் பெறும்.

சிறியதாக இணைந்து பெரியனவற்றைச் செய்து அரியனவற்றையும் செய்ய முடியும் என நிரூபித்து எங்கள் உடன் பிறப்புக்கள் எல்லைப்படுத்தப்பட்ட மக்களாக வாழும் நிலையை மாற்றுவோம்.

உசாத்துணை :-
விக்னராணி. பா, சமூக ஒன்றுதிரட்டல். மானுடம் சமுகவியல் ஏடு. (2000). 3 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். பக். 31.