முருகன், நளினி விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி ஆகியோர், வெளிநாட்டிலுள்ள தங்கள் உறவினர்களுடன் பேசுவதற்கு அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, இன்று அவர்கள் வெளிநாட்டிலுள்ள அவர்களின் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அனுமதி மறுப்பது ஏன் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி, முருகன் சார்பாக நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையிலுள்ள உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடங்கள் வற்சப் வீடியோ அழைப்பில் பேசுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அத்துடன் முருகன் லண்டனில் உள்ள தங்கையிடம் பேச அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

மேலும் முருகனின் தந்தையின் இறுதிச் சடங்கையும் முருகன் வீடியோ அழைப்பில் பார்ப்பதை தமிழக அரசு மறுத்திருந்ததையும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி “இந்தியாவிற்குள் உறவினர்கள், நண்பர்களுடன் பேச அனுமதிக்கத் தாயர். வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச அனுமதிக்க முடியாது. இருந்த போதும் வெளிநாட்டில் லான்ட் லைனில் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அவர்கள் வேறு மொழியில் பேசினால் எங்களால் தெரிந்து கொள்ள முடியாது” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “நளினி, முருகன் தமிழர்கள் தானே? சட்ட மன்றத்தில் ஏழு பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசு, உறவினர்களிடம் பேச அனுமதி மறுப்பது ஏன்? ஏன் இந்த முரண்பாடு? அரசு மநிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்” என்று அறிவுரை வழங்கினார்.  அத்துடன் அரசின் உரிய பதிலை நாளை தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.