முருகதாஸா….

ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக 2009 பெப்ரவரி 12ஆம் திகதி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். இவரின் நினைவு நாளையொட்டி அவருக்கான கவிதை பிரசுரமாகின்றது.

முத்துச்சிரிப்புக் கொண்டவனே
முருகதாஸா! வீர வித்துக்கள்
வீழ்ந்தபோது உன்னை நீயே
வீரத்தீ மூட்டிக்கொண்டாய்….

விடுதலை முற்றம் பற்றியெரிகையில்
வீரனாய் எழுந்துநின்று உன்னையே தீயாக்கி உண்மைக்காய் ஒளி தந்தாய்!

உன் முகத்திற்குள் இருந்த பரவசத்தில்
உன் அகத்திற்குள் குடிகொண்டதீயை – யாருமே கண்டுகொள்ளவே இல்லை…!
சினக்கக்கூடத் தெரியாத சிரித்தமுகத்தில் எப்படி இந்தச் சிறுத்தையின் சீற்றத்தை மறைத்துவைத்தாய்…?

அகிம்சை வழியில் அறப்போரின்
ஆயுதமாய் நின்று நெருப்பை
அள்ளித் தின்றவனே!
எம் தேசத்தாய்மடியில்
தவழும் நெருப்புக்குழந்தையடா நீ…

முருகதாஸா உன்னை நினைக்கையில் உருகுதடா எம் நெஞ்சம்…
ஊமையாய்க் கிடக்கின்ற உலகின் வாயில்
உண்மைக்கேன் இன்னும் பஞ்சம்…

நீ காற்றோடு கலந்த அந்த மண்ணில்தானே
கால்நடையாய் வந்துபோகிறோம்…
நீ கற்பூரமாய்ப்போன முன்றலில் தானே
எம் தலைவிதி எழுதிப்போக வருகிறோம்

சிறகுவிரித்து நெருப்புப் பறவையாய் நீ பறந்துபோன திசைநோக்கிப் பார்த்துக்கிடக்கிறோம் – வீர
மறவர்கள் அணிநின்ற தேசத்தின்
சுதந்திரம்தேடிக் காத்துக்கிடக்கின்றோம்!
-காந்தள்-