முப்படையைச் சேர்ந்த 313 பேருக்கு கொரோனா

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் முப்படையைச் சேர்ந்த 313பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக கடற்படை வீரர்கள் 302 பேரும், இராணுவ வீரர்கள் 10 பேரும், ஒரு விமானப்படை வீரரும் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

வெலிசறை கடற்படை முகாமில் 277 பேருக்கும், ரங்கல முகாமில் 25 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றிற்கு உள்ளாகி குணமடைந்த முதலாவது வீரர் இன்று அங்கொட தொற்றுநோய் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

விமானப்படை இசைக் குழுவின் உறுப்பினரான கோப்ரல் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தரைப்படையைச் சேர்ந்த 4பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை தரைப்படையைச் சேர்ந்த 10பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை பொலிஸ் திணைக்களத்தில் எவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும் 240பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.