தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மகிந்த வழங்கிய வாக்குறுதி

சந்தேகத்தின் பேரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க சட்ட முறைமைகளை ஆராய்வதாகவும், பொது மன்னிப்பில் அவர்களை விட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மகிந்த ராஜபக்ஸ வாக்குறுதியளித்துள்ளார்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா உட்பட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரதமரிடம் எழுத்துமூலமாக குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பாக பேசுவதற்காகவே இச் சந்திப்பு இடம்பெற்றது.