முதலமைச்சர் வேட்பாளர் யார்? – அகிலன்

மாகாண சபைகளுக்கான தேர்தல் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படாத போதிலும், வடக்கு கிழக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் இடையே பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்திருக்கும் நிலையில், நடைபெறக்கூடிய மாகாணசபைத் தேர்தல் ஒன்றில் எந்த ஒரு தமிழ் கட்சியும் வடக்கிலோ கிழக்கிலோ அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற நிலைமை காணப்படுகின்ற போதிலும், தமிழ் கட்சிகளிடையே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து பெரும் வாக்குவாதங்களும், முரண்பாடுகளும், சர்ச்சைகளும் உருவாகியிருக்கின்றன. இந்த முரண்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்து உருவாகியிருக்கும் சர்ச்சையை தேர்தலை ஒத்தி வைப்பதற்கான  உபாயமாக அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றத்தில் தற்போதைய மாகாண சபை தேர்தல் முறை குறித்து திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. குறிப்பிட்ட திருத்தத்தை கொண்டு வந்து, தேர்தலை நடத்துவதற்கு எப்படியும் எட்டு மாதங்களாவது தேவைப்படும். அப்படிப் பார்க்கும் போதும் மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த வருடத்தில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

இருந்தபோதிலும், தமிழ் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு வியூகங்களை வகுப்பதற்கு ஆரம்பித்து விட்டன. கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா தோல்வி அடைந்ததும் அதற்கு பிரதான காரணங்களில் ஒன்று. தேர்தல் தோல்வியின் பின்னர் பத்து கட்சிகளை இணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியை மாவை. சேனாதிராஜா முன்னெடுத்திருந்தார். 10 கட்சிகளை அவர் அரவணைக்க முற்பட்டது, வரப்போகும் மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு தான். கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அனைத்து தரப்பினரையும் இதன்மூலம் அரவணைத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றி விட முடியும் என்ற கனவுடன் மாவை. சேனாதிராஜா காய்களை நகர்த்தினார்.

தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் மாவை. சேனாதிராஜாவின் இந்த கருத்துக்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும் கூட, மற்றொரு தரப்பினர் மாவை முதலமைச்சராக வருவதை விரும்பவில்லை. குறிப்பாக சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றவர்கள் மாவை. சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது, தங்களுடைய அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதுகிறார்கள். அதனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனைவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த 10 கட்சிகளின் கூட்டமைப்பை விரும்பவில்லை. கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை இணைத்து புதியதொரு கூட்டணியை நீங்கள் அமைக்கத் தேவையில்லை. அவர்கள் விரும்பினால் மீண்டும் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளட்டும் என்பதுதான் மாவைக்கு சம்பந்தன் கொடுத்த பதிலாக இருந்தது.

Capture.jpg1 முதலமைச்சர் வேட்பாளர் யார்? - அகிலன்

பத்து கட்சிகளும் புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கினால், அதன் தலைமைப்பதவி மாவை. சேனாதிராஜாவிடம் போகக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. அது தன்னுடைய தலைமைப் பதவிக்கு ஆப்பு வைத்து விடும் என்ற கருத்து சம்பந்தனிடம் இருக்கலாம். அதேபோல் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் கண் வைத்து செயற்படும் ஸ்ரீதரன் – சுமந்திரன் கூட்டணியை பொறுத்தவரையிலும் “மாமா இந்த நகர்வு தமக்கு ஆபத்தானது” என்ற கருத்தையே கொண்டிருக்கிறார்கள். 10 கட்சிகளின் கூட்டத்தில் இவர்கள் கலந்துகொண்டு இருந்தாலும்கூட அது பலமடைவதை அவர்கள் விரும்பவில்லை.

இந்தப் பின்னணியில் 10 கட்சி கூட்டமைப்பு என்பது கடந்த இரண்டு மாதங்களாக செயலிழந்து போன ஒரு நிலைமையில் தான் காணப்படுகின்றது. பத்துக் கட்சிகளையும் இணைத்து பேரவை ஒன்று அமைக்கப் போவதாக மாவை. சேனாதிராஜா முன்னர் அறிவித்திருந்த போதிலும் கூட, பின்னர் அந்த அறிவிப்பில் இருந்து அவர் பெருமளவுக்கு விலகிக் கொண்டு விட்டார். அது சாத்தியமல்ல என்பது அவருக்கு பின்னர் தான் புரிந்தது. இருந்தபோதிலும், முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பை விட்டுக் கொடுப்பதற்கு அவர் தயாராக இல்லை. அதற்கான நகர்வுகளை தனக்கு ஆதரவான சி. வி. கே. சிவஞானம் போன்றவர்கள் மூலமாக அவர் முன்னெடுத்து வருவதைக் காணமுடிகின்றது.

இந்தப் பத்துக் கட்சி கூட்டணியில் இருந்து முதலில் வெளியேறியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான். கொள்கை ரீதியாக சில காரணங்களை அவர் இதற்காக முன்வைத்தார். விக்னேஸ்வரன் கூட இதில் உண்மையில் அக்கறையாக கலந்து கொண்டவர் அல்ல. பெரும்பாலும் கட்சித் தலைவர்கள் அனைவரும் அதன் கூட்டங்களில் கலந்து கொள்கின்ற போதிலும், விக்னேஸ்வரன் ஒரு தடவை கூட அதில் கலந்து கொள்ளவில்லை. தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அவர் அதற்கு அனுப்பி வைத்தார். அதேவேளையில் மாவை. சேனாதிராஜாவிற்கு எதிராகவும் அவர் தொடர்ச்சியாக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார்.

10 கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கக்கூடிய தகுதி ரெலோ அமைப்பில் இருந்து பிரிந்து தமிழ் தேசிய கட்சி என்ற பெயரில் ஒரு அமைப்பை தற்போது உருவாக்கி, செயல்படுத்தி வரும் ஸ்ரீகாந்தாவுக்கு இருக்கிறது என சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை விக்னேஸ்வரன் வெளியிட்டார். ஆனால் இதற்குத்தான் பொருத்தமானவர் அல்ல என்பதை ஸ்ரீகாந்தா பின்னர் விக்னேஸ்வரனிடம் நேரடியாக தெரியப்படுத்தியதாகவும் தகவல் உள்ளது.

அதேபோல் கடந்த வாரம் மற்றும் ஒரு சர்ச்சையை அவர் வெளியிட்டார். வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக களத்தில் இறங்க பொருத்தமானவர் வேலன் சுவாமிகள் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அத்துடன் மாவை. சேனாதிராஜா அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் எனவும் அவர் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

வேலன் சுவாமிகளை பொறுத்தவரையில், அண்மைக் காலத்தில்தான் அவர் அரசியல் அரங்கில் பேசப்படும் ஒருவராக முன்னுக்கு வந்திருக்கின்றார். மக்கள் போராட்டங்கள் மூலமாகவும் குறிப்பாக ‘பொத்துவில் முதல் பொலிகண்டி’ வரை என்ற பெயரில் நடத்தப்பட்ட பேரணியில் முன்னணியில் இருந்ததன் மூலமாகவும் அவருடைய பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது. சின்மயா மிஷனை சேர்ந்த வேலன் சுவாமிகள் திடீரென அரசியலில் பிரவேசித்தது; அவருடைய பெயர் பிரபலமடைந்தது கேள்விகளை ஏற்படுத்தியிருந்த பின்னணியில்தான் முதலமைச்சர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று கருத்து விக்னேஸ்வரனால் முன்வைக்கப்பட்டது.

வேலன் சுவாமிகளை விக்னேஸ்வரன் முன்மொழிந்தமைக்கு காரணம், அவர் பொருத்தமானவர் என்பதால் அல்ல. முதலமைச்சர் பதவியில் கண் வைத்திருக்கும் மாவை. சேனாதிராஜாவிற்கு எதிரான ஒரு காய் நகர்த்தலாகவே அதை அவர் முன்னெடுத்திருந்தார். விக்னேஸ்வரனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் முதலமைச்சர் பதவிக்கு தான் இலக்கு வைத்து செயற்படவில்லை என்றும், அரசியலில் களம் இறங்கும் திட்டம் எதுவும் தன்னிடம் இல்லை எனவும் வேலன் சுவாமிகள் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார். அதை விட ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ மக்கள் இயக்கத்தில் சம்பந்தப்பட்ட எவருமே அரசியலில் பிரவேசிக்கும் திட்டத்துடன் இல்லை எனவும் அவர் உறுதியாக கூறியிருக்கின்றார். அந்த வகையில் மாவை. சேனாதிராஜாவிற்கு எதிராக விக்னேஸ்வரன் முன்னெடுத்திருந்த இரண்டாவது காய் நகர்த்தல் தோல்வியடைந்து இருப்பதாக தெரிகின்றது.

மாவைக்கு எதிராக விக்னேஸ்வரன் காய் நகர்த்துவதை பார்த்துக்கொண்டு சுமந்திரன் தரப்பினர் இப்போது மௌனமாகவே இருப்பதாக தெரிகின்றது. தாங்கள் செய்ய வேண்டிய பணியை விக்னேஸ்வரன் திறம்பட செய்கிறார் என அவர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்படும் நிலையில் வேறு திட்டத்துடன் சுமந்திரன் தரப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக வட மாகாணசபையில் அமைச்சர் பதவியில் இருந்த ஒருவருடைய பெயரும் முதலமைச்சர் பதவிக்காக அடிபடுகின்றது.

இதனைவிட யாழ். மாநகர சபையின் மேயர் மணிவண்ணன் உடைய பெயரும் முதலமைச்சர் பதவிக்காக பேசப்படுகின்றது. அண்மையில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி இருப்பதன் மூலம் மணியின் பெயர் மேலும் பிரபலம் அடைந்து இருக்கிறது. விக்னேஸ்வரன் கூட மணிவண்ணனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மணிவண்ணனுக்கு இதுவரையில் ஒரு கட்சி இல்லை. ஆனால் அவருக்கு ஆதரவாளர்கள் நிறைய இருக்கிறார்கள். அதேவேளையில் சுமந்திரன் தரப்பினருடனும் மணிவண்ணன் அண்மைக் காலத்தில் நெருக்கமாக பழகி வருகிறார். அதனால் மணிவண்ணனை பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக தெரிகிறது.

கேள்விக்குறியாகி இருக்கும் விடயம் என்னவென்றால், மாவை. சேனாதிராஜாவிற்கு முதலமைச்சர் பதவி கிடைக்குமா என்பதுதான். அதேவேளையில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இந்த தடவை தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடப் போகின்றது.  மணிவண்ணன் பிளவு அவர்களுக்கு பாரிய ஒரு பின்னடைவாக இருக்கும் என்பது உண்மைதான். இவற்றை நடைபெறப்போகும் மாகாண சபைத் தேர்தல்களில் மூலம்  புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.