மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை;வங்கக்கடலில் தாழமுக்கம்

இலங்கையை அண்மித்துள்ள வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுப்பெறும் நிலையில் மறுஅறிவித்தல் வரும்வரை இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நிலைத்திருக்கின்றது. இது எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் அந்தப் பிரதேசத்திலேயே மேலும் குறைந்த அழுத்தத்துக்கு உள்ளாகும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அது தெற்கு வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் சுழல் சூறாவளியாக மாறும் வாய்ப்பு காணப்படுவதோடு, நாளை வரை வட மேல் திசையிலும் அதன் பின்னர் மே 18ஆம் திகதி முதல் மே-20ஆம் திகதி வரை வடகிழக்கு வங்காள விரிகுடா பிரதேசத்தை நோக்கிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.