மீனவர்களுக்கு தற்போதும் கடற்படையால் நெருக்கடி- -எம்.எம் மஹ்தி

திருகோணமலை,கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி  கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்  அவர் தெரிவிக்கையில், கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில் தங்களது தொழிலை  நிம்மதியாக செய்யமுடியாதுள்ளது என்றும் இதற்கு ஏதேனும் தீர்வே பெறமுடியாதா? எனவும் எங்கள் விடயத்தில் கொஞ்சமாவது கரிசனை காட்டுங்கள் எனவும் மீனவர்கள் என்னிடம் முறையிடுகின்றனர்.

அனுமதிக்கப்பட்ட சுருக்கு வலை கொண்டு 7 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் சென்று  மீன்பிடிக்க அனுமதி வழங்கப் பட்டிருந்தாலும்  அத்தூரத்தை கிண்ணியா கரையில் இருந்து கணிக்காமல்  9 கடல் மைல் தூரத்தில் இருக்கும் சம்பூர் வெளிச்ச வீட்டில் இருந்து  கணித்திருப்பதானது சிறிய ரக இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும்  மீனவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய அநீதியாகும்.

கிண்ணியா மீனவர்கள் தொழிலுக்காக செல்கின்ற போது கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீன் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், வழக்குகள் தொடர்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலை மேலும் நீடிக்குமாக இருந்தால் மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதார உரிமையை பெற்றுக் கொள்வதன் நிமித்தம் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் குதிப்பதை தவிர வேறு வழியில்லை” என்றார்