மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தவுள்ள வடகொரியா

வரவிருக்கும் நாட்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தென்கொரிய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்து வெளியிடுகையில், “வடகொரியா இன்னும் சில தினங்களில் கடற்கரைப் பகுதிகளில் ஏவுகணை பரிசோதனையை செய்யத் திட்டமிட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடகொரியாவின் நடவடிக்கைகளை தாம் தொடர்ந்தும் கவனித்து வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதேவேளை வடகொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் 75ஆவது ஆண்டுவிழா ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் மிகப்பெரிய ஏவுகணைகளை வடகொரியா காட்சிப்படுத்தவுள்ளது.

மேலும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி கே.என்-24 என்ற குறுந்தூர ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனது ஏவுகணை பரிசோதனை மூலம் அண்டை நாடுகளை பதற்றமடையச் செய்யும் வடகொரியாவிற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது. ஆனால் வடகொரியா இதே நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

அத்துடன் வடகொரியாவின் இந்த ஏவுகணை நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்தும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.