மீண்டும் அமெரிக்க அதிபராக பதவி ஏற்பாரா ட்ரம்ப்?

உலக நாடுகள் அனைத்தும் உற்றுநோக்கி வரும் அமெரிக்காவின் 59-வது அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி  நடந்து முடிந்தது வாக்கு எண்ணிக்கைகள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கும் மேலாக  எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக செனட்டர் கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸும் 2-வது முறையாகப் போட்டியிட்டனர்.

இருந்தும் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன்  கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்ட ரீதியாகத் தான் எதிர்கொள்ள இருப்பதாகவும்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெற்றியைத் தீர்மானிக்கும் அதிமுக்கிய மாநிலங்களான (Battleground states) பென்சில்வேனியா, ஜார்ஜியா, அரிசோனா, நிவேடா, நார்த் கரோலினா போன்ற மாநிலங்களில் இழுபறி நீடிப்பதால், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்த ஐந்து மாநிலங்களில் நான்கில் தற்போது ஜோ பைடன்  முன்னணியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த புதன்கிழமையன்று அதிபர் ட்ரம்ப், அப்போது பல மில்லியன் வாக்குகள் எண்ணிமுடிக்கப்படுவதற்கு முன்பே, தாம் வெற்றிப் பெற்றுவிட்டதாக  அறிவித்துக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம். வெளிப்படையாகச் சொன்னால் வெற்றிப் பெற்றுவிட்டோம். ஆனால் ஜனநாயக் கட்சி நாம் பெற்ற வெற்றியைத் திருடப் பார்க்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

மேலும் “தேர்தல் நாளுக்குப் பிறகான தபால் வாக்குப்பதிவுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தேர்தலில் பல்வேறு மோசடிகள் நடைப்பெற்றுவருகிறது, சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படவேண்டும். எனவே நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்தை நாட உள்ளோம். வாக்கு எண்ணிக்கையும் உடனடியாக நிறுத்தவேண்டும்” என்று சர்வாதிகார தொனியில் செய்தியாளர்களிடத்திலும் ட்விட்டரிலும்  தெரிவித்தார்.

நேற்று மதியம் மீண்டும் வெள்ளை மாளிகையில் பேசும்போது, “சட்டப்படியான வாக்குகள் மட்டும் எண்ணப்பட்டால், நான் எளிதாக அதிபர் பதவியை மீண்டும் வென்றுவிடுவேன். ஆனால் ஜனநாயக் கட்சியினர் ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டே சட்டவிரோதமாக அளிக்கப்பட்ட தபால் வாக்குகளை எண்ணுவதால், பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிச்சிகன், விஸ்கான்சின், அரிசோனா போன்ற முக்கிய மாநிலங்களின் வெற்றியை என்னிடமிருந்து அபகரிக்கப்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

“வாக்கு எண்ணிக்கையை உடனே நிறுத்துங்கள், நான் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறேன், யார் வெற்றியாளர் என்பதை உச்சநீதிமன்றம் முடிவுசெய்யட்டும்” என்று மற்றுமொருமுறை செய்தியாளர்கள் சந்திப்பிலும் ட்விட்டரிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கைச் சம்மந்தமாகத் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.