மியான்மா் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம் – சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக மின் கட்டனம் செலுத்தாமலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு, அந் நாட்டின் சமூக செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியான்மரில் இராணுவ ஆட்சி ஏற்பட்டது முதல் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை இராணுவத்தினர் சுட்டதில் 700க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தோனேசியாவில் நடைபெறும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் மாநாட்டில் மியான்மர் இராணுவத்தின் மூத்த அதிகாரி, மின் ஆங் ஹளைங், ஒப்பந்தம் ஒன்றை  சமர்ப்பித்துள்ளார்.

அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பிரதிநிதிகளை விடுவிப்பது குறித்தோ, ஆங் சாங் சுகியை விடுதலை செய்வது குறித்தோ குறிப்பிடப்படவில்லை என்றும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மக்கள் மியான்மரின் பல நகரங்களில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி – தி இந்து