மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக ‘மூன்று விரல்’ போராட்டம்

மியான்மர்  இராணுவ ஆட்சிக்கு எதிராக  நடக்கும் ஆர்பாட்டங்களின் போது மக்கள்  வெளிப்படுத்தும் ‘மூன்று விரல்’ வணக்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கம் கடந்த 1ம் திகதி கவிழ்க்கப்பட்டு, இராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு மக்கள்  போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த போராடடங்களிலேயே மூன்று விரல் வணக்கமும் எதிர்ப்பின் அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அண்டை நாடான தாய்லாந்தில் மன்னர் மஹா வஜிரலோங்க்கார்னின் முடியாட்சிக்கு எதிரான போராட்டங்களிலும் இந்த மூன்று விரல் வணக்கத்தை காண முடிந்தது.

பிரபல அமெரிக்க எழுத்தாளர் சுசேன் காலின்ஸின் ஹங்கர் கேம்ஸ் புத்தகம் மற்றும் அவரது படங்களின் மூலமாக இந்த மூன்று விரல் சைகை அறிமுகப்படுத்தப்பட்டது. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்து, மருத்துவ ஊழியர்களால் இந்த சைகையானது முதல் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அதை அடியொற்றி இளைஞர்கள் பின்பற்ற தொடங்கினர். தொடர்ந்து திங்களன்று யாங்கோனில் (Yangon) நடைபெற்ற மிகப்பெரிய ஆர்பாட்டத்தில் மூன்று விரல் வணக்கம் சைகையை அம்மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சுசேன் காலின்ஸின் ஹங்கர் கேம்ஸ் படத்தில் பிரசிடென்ட் ஸ்னோ என்பவரின் கொடூங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு தங்கள் எதிர்ப்பை  வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.