மியான்மரில் இராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது

மியான்மரில் இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் பல்லாண்டு காலமாக நடந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி அதில் வெற்றி பெற்றவர் ஆங் சான் சூகி. இதற்காக அவர் பல ஆண்டுகள் வீட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். உலகம் முழுவதிலும் இருந்தும் ஆங் சான் சூகியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறுவற்கு முன்பாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துக்குத் தலைமை தாங்கியவர் ஆங் சான். இவர் தற்போதய தலைவர் சூகியின் தந்தை.

ஆங் சான், பர்மிய விடுதலைப் படை என்கிற இராணுவ அமைப்பைக் கலைத்துவிட்டு அரசியல் கட்சி ஆரம்பித்தார். ஆனால், நாடு விடுதலை அடையும் முன்பே அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டார். அவரது சகாக்கள் ஆட்சியிலும் இராணுவத்திலும் தலைமை ஏற்றனர்.

1990ஆம் ஆண்டில் இராணுவம் தேர்தல் நடத்தியது. 492 இடங்களில் 392 இடங்களை கைப்பற்றியது என்.எல்.டி. கட்சி ஆனால், இராணுவம் பதவி விலக மறுத்துவிட்டது. 1991ஆம் ஆண்டு ஆங் சான் சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தன் நாட்டிலுள்ள ரோஹிங்கியா இன மக்களை இனப்படுகொலை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து உலக அரங்கில் அவரின் புகழ் சரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. எனினும், தன் நாட்டில் வெகுவான ஆதரவு பெற்று, கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றிபெற்றார் சூகி.

கடந்த நவம்பர் மாதம் மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியமைக்க தேவையான 322க்கும் அதிகமான இடங்களில் வென்று மீண்டும் ஜனநாயக தேசிய லீக் ஆட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இந்த வெற்றி மோசடியான வெற்றி என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்தது. விரைவில் என்எல்டி கட்சி மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று மியான்மரின் இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.