மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்று உறுதியானவர்களின் தொகை 1,034 ஆகியது

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஆறு பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது.

அதன்படி மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையின் நான்கு ஊழியர்களும், வெலிசறையில் அமைந்துள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழில்சாலையின் ஊழியர் ஒருவரும் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய துப்புரவுப் பணியாளர் ஒருவரும் இறுதியாக பதிவான கொரோனா தொற்றாளர்கள் ஆவர்.

முன்னதாக இந்த ஆடைத் தொழில்சாலையின் 190 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக நேற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது, மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலில் மொத்தமாக 1,034 பேரதொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத் தொழில்சாலையில் 729 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. இந்நிலையில், நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4,448 ஆக உயர்வடைந்ததுடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆக 3,274 பதிவாகியுள்ளது.

இதற்கிடையில் மினுவாங்கொட கொவிட்-19 கொத்தணி பரவலுடன் தொடர்புடைய சுமார் 4,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.