மாபெரும் குற்றத்திற்கான நீதியை மறுத்துள்ளார் கோத்தா-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் மாபெரும் குற்றத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுத்துள்ளார் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

போரின் போது படையினர் மிகப்பெரும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும் சிறீலங்காவில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது அரிதானது. ஒருசிலர் தண்டிக்கப்பட்டாலும், அவர்களும் விடுதலை செய்யப்படுவதுண்டு.

சிறீலங்காவின் நீதித்துறை அனைத்துலக தரமற்றது எனவே சிறீலங்காவில் மேற்கொள்ளப்படட போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசினால் நீதியை நிலைநாட்ட முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என அதன் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் மினாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி என ஐ.நாவினால் அடையாளம் காணப்பட்ட சவீந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்திருந்தது. அவர் மீது அமெரிக்கா பயணத்தடையை கொண்டுவந்திருந்தது. எனினும்; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மற்றுமொரு படை அதிகாரியான காமால் குணரட்னாவை கோத்தபாய பாதுகாப்புச் செயலாளரான நியமித்திருந்தார்.

இவர்கள் இருவருமே தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைக் குழுவை வழிநடத்துகின்றனர். சிறீலங்காவில் நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக நீதிவிசாரணைப் பொறிமுறை தேவை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.